வெளிப்படுத்தின விசேஷம் 11:6-13

வெளிப்படுத்தின விசேஷம் 11:6-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு. அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள். அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:6-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவர்கள் தாங்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில், மழை பெய்யாதபடி வானத்தை அடைத்துப் போடுவதற்கு, வல்லமை உடையவர்களாய் இருப்பார்கள்; அவர்கள் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதற்கும், தாங்கள் விரும்பியபோதெல்லாம், எல்லா விதமான வாதைகளினாலும் பூமியைத் தண்டிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். அப்பொழுது அந்த சாட்சிகளுடைய உடல்கள், அந்தப் பெரிய நகரமான எருசலேமின் வீதியில் கிடக்கும். இந்தப் பெரிய நகரம் அடையாளமாக சோதோம் என்றும், எகிப்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திலேதான், அவர்களுடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார். மூன்றரை நாட்களுக்கு எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், நாடுகளையும் சேர்ந்த மக்கள் அவர்களுடைய உடல்களை உற்றுப்பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய, அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். பூமியில் குடியிருக்கிறவர்கள், அவர்களை ஏளனம் செய்து மகிழுவார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகளை அனுப்பி கொண்டாடுவார்கள். ஏனெனில், இந்த இரண்டு இறைவாக்கினரும், பூமியில் வாழுகிறவர்களை துன்புறுத்தி, வேதனைப்படுத்தி இருந்தார்கள். ஆனால் மூன்றரை நாட்ளுக்குப்பின், இறைவனிடமிருந்து உயிர்மூச்சு அவர்களுக்குள் வந்தது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்தசத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்கள் ஒரு மேகத்திலே, பரலோகத்தை நோக்கி மேலே போனார்கள்; அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, இது நடந்தது. அந்நேரத்திலேயே, அங்கு ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது; அதனால் அந்தப் பட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது. அந்தப் பூமியதிர்ச்சியில், ஏழாயிரம்பேர் கொல்லப்பட்டார்கள்; அதற்குத் தப்பியவர்களோ, பயந்தவர்களாய் பரலோகத்தின் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:6-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும். மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள். அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள். அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:6-13 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாள்களில் மழை பெய்துவிடாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு வல்லமை உண்டு. அவர்களுக்குத் தண்ணீரை இரத்தம் ஆக்குகிற வல்லமையும் உண்டு. விரும்பும்போதெல்லாம் அடிக்கடி பூமியைச் சகலவிதமான வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உண்டு. அந்த இரு சாட்சிகளும் தங்களது செய்திகளைச் சொல்லி முடித்தபின், பாதாளத்தில் இருந்து வெளிவருகிற மிருகம் அவர்களை எதிர்த்துச் சண்டையிடும். அம்மிருகம் அவர்களைத் தோற்கடித்து அவர்களைக் கொல்லும். பிறகு ஞானார்த்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படுகிற அந்த மகா நகரத்தின் தெருக்களில் அச்சாட்சிகளின் சடலங்கள் கிடக்கும். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த நகரமும் இது தான். ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர். அந்த இருவரும் இறந்துபோனதற்காக, பூமியில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவர். அவர்கள் விருந்து நடத்தி தமக்குள் பரிசுகளை அளிப்பர். அச்சாட்சிகள் உலகில் உள்ள மக்களுக்கு மிகுதியாகத் துன்பம் அளித்ததால்தான் அம்மக்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள். ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர். பின்னர் அவ்விரு சாட்சிகளும் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு குரலைக் கேட்டனர். அது “இங்கே வாருங்கள்” என்று அழைத்தது. அவர்கள் மேகங்களின் வழியாகப் பரலோகத்துக்குப் போனார்கள். அவர்கள் போவதை அவர்களுடைய பகைவர்கள் கவனித்தனர். அதே நேரத்தில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நகரின் பத்தில் ஒரு பகுதி அழிந்துபோனது. அந்நில நடுக்கத்தால் ஏழாயிரம் மக்கள் இறந்து போயினர். இறந்து போகாத மற்றவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மகிமைப்படுத்தினர்.