வெளிப்படுத்தல் 11:6-13

வெளிப்படுத்தல் 11:6-13 TCV

இவர்கள் தாங்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில், மழை பெய்யாதபடி வானத்தை அடைத்துப் போடுவதற்கு, வல்லமை உடையவர்களாய் இருப்பார்கள்; அவர்கள் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதற்கும், தாங்கள் விரும்பியபோதெல்லாம், எல்லா விதமான வாதைகளினாலும் பூமியைத் தண்டிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். அப்பொழுது அந்த சாட்சிகளுடைய உடல்கள், அந்தப் பெரிய நகரமான எருசலேமின் வீதியில் கிடக்கும். இந்தப் பெரிய நகரம் அடையாளமாக சோதோம் என்றும், எகிப்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திலேதான், அவர்களுடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார். மூன்றரை நாட்களுக்கு எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், நாடுகளையும் சேர்ந்த மக்கள் அவர்களுடைய உடல்களை உற்றுப்பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய, அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். பூமியில் குடியிருக்கிறவர்கள், அவர்களை ஏளனம் செய்து மகிழுவார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகளை அனுப்பி கொண்டாடுவார்கள். ஏனெனில், இந்த இரண்டு இறைவாக்கினரும், பூமியில் வாழுகிறவர்களை துன்புறுத்தி, வேதனைப்படுத்தி இருந்தார்கள். ஆனால் மூன்றரை நாட்ளுக்குப்பின், இறைவனிடமிருந்து உயிர்மூச்சு அவர்களுக்குள் வந்தது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்தசத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்கள் ஒரு மேகத்திலே, பரலோகத்தை நோக்கி மேலே போனார்கள்; அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, இது நடந்தது. அந்நேரத்திலேயே, அங்கு ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது; அதனால் அந்தப் பட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது. அந்தப் பூமியதிர்ச்சியில், ஏழாயிரம்பேர் கொல்லப்பட்டார்கள்; அதற்குத் தப்பியவர்களோ, பயந்தவர்களாய் பரலோகத்தின் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தினார்கள்.

Video for வெளிப்படுத்தல் 11:6-13