வெளி 11:6-13

வெளி 11:6-13 IRVTAM

அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும். மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள். அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள். அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.