சங்கீதம் 78:1-39

சங்கீதம் 78:1-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன். நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள். நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம். அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள். அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, அவருடைய செயல்களை மறவாமல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது. எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்; அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள். அவர்கள் அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள். அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார். அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார். அவர் பகலில் மேகத்தினாலும், இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார். அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார். ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள். அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள். அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, “பாலைவனத்தில் விருந்தளிக்க இறைவனால் முடியுமோ? ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது, நீரோடைகள் நிரம்பி வழிந்தன, ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ? தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள். யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது; அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது. ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை. ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; வானங்களின் கதவுகளைத் திறந்தார். அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை இறைவன் அவர்களுக்கு அனுப்பினார். அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார். அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார். அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார். அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார். ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே, இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார். இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்; அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை. ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார். இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள். இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள். அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை. ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; அவர் அவர்களை அழித்துவிடாமல் அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார். அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை, அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார்.

சங்கீதம் 78:1-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும், அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார். கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார். பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள். தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள். ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது. அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார். வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து, அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார். அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார். இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார். அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை. அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.

சங்கீதம் 78:1-39 பரிசுத்த பைபிள் (TAERV)

என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள். நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள். நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன். நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன். நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம். எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள். நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம். இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம். அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம். கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார். தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார். நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார். தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார். புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள். அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள். எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள். தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள். அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள். அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை. எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள், ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை. அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள். தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள். அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள். எகிப்தின் சோவானில் தேவன் அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார். தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார். இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது. ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர். ஒவ்வோர் இரவும் ஒரு நெருப்புத் தூணின் ஒளியினால் தேவன் அவர்களை வழிநடத்தினர். பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார். நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார். கன்மலையிலிருந்து ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்! ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர். பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள். பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள். தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள். அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு, “பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா? தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது. நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள். அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார். யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார். தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார். ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை. தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை. ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார். உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது. வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது. தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள். அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார். தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார். காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன. தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார். பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது. பாளையத்தின் நடுவே கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன. அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது. ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பறவைகளின் இரத்தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள். தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார். அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார். பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார். ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்! தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை. எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச் சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார். தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள். அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள். தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள். மிக உன்னதமான தேவன் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை நினைத்து பார்த்தார்கள். அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள். அவர்கள் உறுதியாக இருக்கவில்லை. அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை. ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை. ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார். அவர்கள் பாவங்களுக்காக அவர் அவர்களை மன்னித்தார். அவர் அவர்களை அழிக்கவில்லை. பலமுறை தேவன் அவரது கோபத்தை அடக்கிக் கொண்டார். தேவன் தாம் மிகுந்த கோபமடையாதபடி பார்த்துக்கொண்டார். அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார். ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும்.

சங்கீதம் 78:1-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்து கொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்துதேசத்துச்சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார். கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார். பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தார். கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள். தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக்கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள். ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது. அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். ஆகாசத்திலே கீழ்க்காற்றை வரப் பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி, அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார். அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே, தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று. இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார். அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை. அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார். அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.