சங்கீதம் 78:1-39

சங்கீதம் 78:1-39 TCV

என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன். நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள். நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம். அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள். அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, அவருடைய செயல்களை மறவாமல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது. எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்; அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள். அவர்கள் அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள். அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார். அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார். அவர் பகலில் மேகத்தினாலும், இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார். அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார். ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள். அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள். அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, “பாலைவனத்தில் விருந்தளிக்க இறைவனால் முடியுமோ? ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது, நீரோடைகள் நிரம்பி வழிந்தன, ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ? தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள். யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது; அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது. ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை. ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; வானங்களின் கதவுகளைத் திறந்தார். அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை இறைவன் அவர்களுக்கு அனுப்பினார். அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார். அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார். அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார். அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார். ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே, இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார். இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்; அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை. ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார். இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள். இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள். அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை. ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; அவர் அவர்களை அழித்துவிடாமல் அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார். அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை, அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார்.