சங்கீதம் 119:89-176
சங்கீதம் 119:89-176 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது. உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன. உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன். நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர். நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன். கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன். பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை. ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன். உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது. நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன். உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்; நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர். உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை. உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன். உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன். நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும். என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன். கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை. உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி. உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது. இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன். நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்; உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன். அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்! உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் வாழ்வடைவேன்; என் நம்பிக்கை வீண்போக விடாதேயும். என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்; நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன். உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர். அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது. பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன். உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது; நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன். நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும். உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்; அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும். உமது இரட்சிப்பைக் காண்பதற்கும், உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன. உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். நான் உமது பணியாளன்; உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும். யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது. உமது கட்டளைகளை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும், உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும், நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன். உமது நியமங்கள் ஆச்சரியமானவை, ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன; அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன. நான் உமது கட்டளைகளை விரும்பி, என் வாயைத் திறந்தவன்னம் ஏங்குகிறேன். உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே, என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும். உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி, ஒரு பாவமும் என்னை ஆளுகைசெய்ய விடாதேயும். மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்; அதினால் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்வேன். உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால், எனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; உமது சட்டங்கள் நியாயமானவை. நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை; அவை முற்றும் நம்பத்தகுந்தவை. என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால், எனது தீவிர ஆர்வம் என்னை சுட்டெரிக்கிறது. உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன; உமது அடியேன் அவற்றை நேசிக்கிறேன். நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும், உமது ஒழுங்குவிதிகளை நான் மறக்கமாட்டேன். உமது நீதி நித்தியமானது, உமது சட்டம் உண்மையானது. கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன. உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை; அவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும், அதினால் நான் பிழைப்பேன். யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்; எனக்குப் பதில் தாரும், நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன். நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்; நான் உமது நியமங்களைக் கைக்கொள்வேன். விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி, இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன. நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்; யெகோவாவே, உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் உமது சட்டத்திற்குத் தூரமாய் இருக்கிறார்கள். என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; உமது கட்டளைகள் எல்லாம் உண்மை. உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை வெகுகாலத்திற்கு முன்பே நான் அறிந்திருக்கிறேன். என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்; ஏனெனில், நான் உமது சட்டத்தை மறந்துவிடவில்லை. எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்; உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால், அவர்கள் உமது விதிமுறைகளைத் தேடுவதில்லை. யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது; உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை. துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்; ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை. நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை; நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை. ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது. பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்; ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன். நீதியான உமது சட்டங்களுக்காக நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; அவர்களுக்கு இடறலில்லை. யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்; உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன். நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்; ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்; எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன. யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக; உமது வார்த்தையின்படியே எனக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தாரும். என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக; உமது வாக்குத்தத்தத்தின்படியே என்னை விடுவியும். எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர். எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை. உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக; ஏனெனில் நான் உமது ஒழுங்குவிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்; உமது சட்டம் எனது மகிழ்ச்சி. நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக. காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்; உமது அடியேனைத் தேடுவீராக; ஏனெனில் நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.
சங்கீதம் 119:89-176 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும். உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது. உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும். என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன். உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது. பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும். மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம். துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி. உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும். உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும். தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள். யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன். எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள். யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன். உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது. இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை. யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும். உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும். யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும். காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.
சங்கீதம் 119:89-176 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும். உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும். நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர். கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது. உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது. உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால் எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன். ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன. கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும். ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன். தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள். ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று. உமது சட்டங்களைத் தவிர, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன். கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும். உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும். உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என் ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன். நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால், முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன். வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர். எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது. கர்த்தாவே, நீரே என் ஆசிரியர். ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன். என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை. உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின. எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன். கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும். உமது சட்டங்கள் நல்லவை. நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன். நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும். கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும். என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது. ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை. தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை. கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன். கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன். ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும். கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன். கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும். நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன். நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும். கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன். நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன். கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர். ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள். கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர். எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன். கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன். நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன். நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன். கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும். என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும். நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும். கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும், என் கண்கள் தளர்ந்து போய்விட்டன. நான் உமது ஊழியன். உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும். உமது சட்டங்களை எனக்குப் போதியும். நான் உமது ஊழியன். உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும். கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம். ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள். கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும் நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன். நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன். தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன். கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது. அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன். ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது. உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும். கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன். நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன். தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும். உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும். கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும். தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும். கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும். ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால் என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்த்தாவே, நீர் நல்லவர், உமது சட்டங்கள் நியாயமானவை. நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர். நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும். என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன. என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன். கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. நான் அதை நேசிக்கிறேன். நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை. ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன். கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும். உமது போதனைகள் நம்பக் கூடியவை. எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன. ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன். உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது. நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும். கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன். எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்! நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன். நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன். நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன். உமது வார்த்தைகளைக் கற்பதற்கு இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன். உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும். கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும். ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள். அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை. கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர். உமது கட்டளைகள் நம்பக்கூடியவை. பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம், உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன். கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும். நான் உமது போதனைகளை மறக்கவில்லை. கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும். நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும். தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால் அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள். கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர். நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும். என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு. ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை. நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன். கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. நான் அதை வெறுக்கிறேன். பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன். கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும். கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை. உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும். எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள். ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன். கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும் சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன. நான் பொய்களை வெறுக்கிறேன்! நான் அவற்றை அருவருக்கிறேன்! ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். உமது நல்ல சட்டங்களுக்காக ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள். அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது. கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன். நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன். நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன். கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும். நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும். கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும். நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன். ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர். உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும். கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை. என்னருகில் வந்து எனக்கு உதவும். ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன். கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன. கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும். உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும். காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன். கர்த்தாவே, என்னைத் தேடிவாரும். நான் உமது ஊழியன், நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.
சங்கீதம் 119:89-176 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள் வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன். உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக் கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும். என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின் பேரில் நோக்கமாயிருப்பேன். உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும். உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும். மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். உமது அடியேன் மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். நான் சிறியவனும் அசட்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி. உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக் கொள்ளுவேன். அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக் கொள்ளும். உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும். தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள். கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன். என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன். எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள். கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகேன். உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது. இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன். பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக. காணாமற்போன ஆட்டைப் போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.