சங்கீதம் 119:89-176

சங்கீதம் 119:89-176 TCV

யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது. உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன. உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன். நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர். நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன். கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன். பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை. ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன். உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது. நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன். உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்; நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர். உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை. உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன். உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன். நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும். என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன். கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை. உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி. உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது. இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன். நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்; உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன். அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்! உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் வாழ்வடைவேன்; என் நம்பிக்கை வீண்போக விடாதேயும். என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்; நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன். உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர். அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது. பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன். உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது; நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன். நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும். உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்; அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும். உமது இரட்சிப்பைக் காண்பதற்கும், உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன. உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். நான் உமது பணியாளன்; உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும். யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது. உமது கட்டளைகளை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும், உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும், நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன். உமது நியமங்கள் ஆச்சரியமானவை, ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன; அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன. நான் உமது கட்டளைகளை விரும்பி, என் வாயைத் திறந்தவன்னம் ஏங்குகிறேன். உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே, என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும். உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி, ஒரு பாவமும் என்னை ஆளுகைசெய்ய விடாதேயும். மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்; அதினால் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்வேன். உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால், எனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; உமது சட்டங்கள் நியாயமானவை. நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை; அவை முற்றும் நம்பத்தகுந்தவை. என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால், எனது தீவிர ஆர்வம் என்னை சுட்டெரிக்கிறது. உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன; உமது அடியேன் அவற்றை நேசிக்கிறேன். நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும், உமது ஒழுங்குவிதிகளை நான் மறக்கமாட்டேன். உமது நீதி நித்தியமானது, உமது சட்டம் உண்மையானது. கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன. உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை; அவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும், அதினால் நான் பிழைப்பேன். யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்; எனக்குப் பதில் தாரும், நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன். நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்; நான் உமது நியமங்களைக் கைக்கொள்வேன். விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி, இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன. நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்; யெகோவாவே, உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் உமது சட்டத்திற்குத் தூரமாய் இருக்கிறார்கள். என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; உமது கட்டளைகள் எல்லாம் உண்மை. உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை வெகுகாலத்திற்கு முன்பே நான் அறிந்திருக்கிறேன். என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்; ஏனெனில், நான் உமது சட்டத்தை மறந்துவிடவில்லை. எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்; உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால், அவர்கள் உமது விதிமுறைகளைத் தேடுவதில்லை. யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது; உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை. துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்; ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை. நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை; நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை. ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது. பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்; ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன். நீதியான உமது சட்டங்களுக்காக நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; அவர்களுக்கு இடறலில்லை. யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்; உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன். நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்; ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்; எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன. யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக; உமது வார்த்தையின்படியே எனக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தாரும். என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக; உமது வாக்குத்தத்தத்தின்படியே என்னை விடுவியும். எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர். எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை. உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக; ஏனெனில் நான் உமது ஒழுங்குவிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்; உமது சட்டம் எனது மகிழ்ச்சி. நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக. காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்; உமது அடியேனைத் தேடுவீராக; ஏனெனில் நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.