கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும்.
உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர்.
கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.
உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி
கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.
உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால்
எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.
கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும்.
ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள்.
ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
உமது சட்டங்களைத் தவிர,
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
கர்த்தாவே, உமது வார்த்தைகள்
என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
உமது சட்டங்கள் நல்லவை.
நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.
கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.
நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.
நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.
நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.
ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.
எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.
நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.
நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
நான் உமது ஊழியன்.
உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
நான் உமது ஊழியன்.
உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்த்தாவே, நீர் நல்லவர்,
உமது சட்டங்கள் நியாயமானவை.
நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
நான் அதை நேசிக்கிறேன்.
நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
உமது போதனைகள் நம்பக் கூடியவை.
எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.
எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்!
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.
நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
உமது வார்த்தைகளைக் கற்பதற்கு
இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.
கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.
உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,
உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.
கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.
நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.
நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்
அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.
நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.
ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.
கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.
நான் அதை வெறுக்கிறேன்.
பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.
உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
நான் பொய்களை வெறுக்கிறேன்!
நான் அவற்றை அருவருக்கிறேன்!
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
உமது நல்ல சட்டங்களுக்காக
ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.
ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
என்னருகில் வந்து எனக்கு உதவும்.
ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.