நீதிமொழிகள் 6:1-23
நீதிமொழிகள் 6:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால், நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால், நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய். என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால், நீ உன்னை விடுவித்துக்கொள்ள நீ போய் உன்னைத் தாழ்த்தி, உன் அயலான் களைப்படையும் வரை வேண்டிக்கொள். அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே. வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு. சோம்பேறியே, நீ எறும்பிடம் போய், அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு! அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, அதிகாரியோ இல்லை. அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது. சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்? கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும். வீணனும் கயவனுமானவன், வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து, தனது விரல்களால் சைகை காட்டுகிறான். அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்; அவன் எப்பொழுதும் பிரிவினையைத் தூண்டிவிடுகிறான். அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்; மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான். யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு, இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது: கர்வமுள்ள கண்கள், பொய்பேசும் நாவு, குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள், கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம், தீமைசெய்ய விரையும் கால்கள், பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர். என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், உன் தாயின் போதனையை விட்டுவிடாதே. அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்; அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள். நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்; நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும். ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு, இந்த போதனை ஒரு வெளிச்சம், நற்கட்டுப்பாடும் கண்டித்தலும் வாழ்வுக்கு வழி.
நீதிமொழிகள் 6:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, அந்நியனுக்கு உறுதியளித்தால், நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான். அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, வழக்குகளை உண்டாக்குகிறான். ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; உதவியில்லாமல் திடீரென நாசமடைவான். ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால், பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே. என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும். கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.
நீதிமொழிகள் 6:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)
என் மகனே! அடுத்தவனது கடனுக்கு நீ பொறுப்பாளி ஆகாதே. அடுத்தவன் தன் கடனைச் செலுத்த முடியாதபோது நீ அக்கடனைச் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாயா? அடுத்தவன் வாங்கும் கடனுக்கு உன்னைப் பொறுப்பாளியாக ஆக்கிக்கொண்டாயா? அப்படியானால் நீ அகப்பட்டுக்கொண்டாய். உன் சொந்த வார்த்தைகளாலேயே நீ அகப்பட்டுக்கொண்டாய். நீ அடுத்தவனது அதிகாரத்தின் கீழ் இருக்கிறாய். எனவே அவனிடம் போய் உன்னை விடுவித்துக்கொள். உன்னை அக்கடனிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக்கொள். அதுவரை தூங்காதே, ஓய்வுக்கொள்ள எண்ணாதே. வேட்டைக்காரனிடமிருந்து மான் தப்பி ஓடுவதுபோன்று, நீ அந்த வலையிலிருந்து தப்பி ஓடு. வலையிலிருந்து பறவை தப்புவதுபோன்று தப்பிவிடு. சோம்பேறியே! நீ எறும்பைப்போல இருக்க வேண்டும். எறும்பு என்ன செய்கிறது என்று பார். அதனிடமிருந்து கற்றுக்கொள். அந்த எறும்புக்கு ஒரு ராஜாவோ, தலைவனோ, எஜமானோ இல்லை. ஆனால் அது கோடைக்காலத்தில் தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்துக்கொள்ளும். தன் உணவை அது பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் போதுமான அளவுக்கு அதனிடத்தில் உணவு உள்ளது. சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். ஆனால் அவன் மீண்டும், மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் மேலும், மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக்கொண்டு போனது போல இருக்கும். ஒன்றுக்கும் உதவாத தீயமனிதன் பொய்யையும் தீயவற்றையும் கூறுகிறான். அவன் தன் கண்ணைச் சிமிட்டி, கைகளாலும் கால்களாலும் சைகைக்காட்டி ஜனங்களை ஏமாற்றுகிறான். அவன் கெட்டவன். அவன் எப்பொழுதும் தொல்லை செய்யவே திட்டமிடுவான். அவன் எல்லா இடங்களிலும் தொல்லை செய்வான். ஆனால் அவன் தண்டிக்கப்படுவான். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவனுக்குத் துன்பம் வரும். அவன் விரைவில் அழிந்துப்போவான். எவராலும் அவனுக்கு உதவிசெய்ய முடியாது. கர்த்தர் இந்த ஆறு அல்லது ஏழு காரியங்களையும் வெறுக்கிறார். கர்வம் கொண்ட கண்கள், பொய்களைக் கூறும் நாவுகள், அப்பாவி ஜனங்களைக்கொல்லும் கைகள். தீயவற்றைச் செய்யத் திட்டமிடும் மனது, கெட்டவற்றைச் செய்ய ஓடும் கால்கள், வழக்கு மன்றத்தில் பொய்யைச் சொல்லுபவன், உண்மையில்லாதவற்றைக் கூறுபவன், விவாதங்களைத் தொடங்கி வைத்து அடுத்தவர்களுக்குள் சண்டை மூட்டுபவன். என் மகனே, உன் தந்தையின் கட்டளைகளை நினைவுபடுத்திக்கொள். உன் தாயின் போதனைகளையும் மறக்காதே. அவர்களது வார்த்தைகளை எப்போதும் நினைவுபடுத்திக்கொள். அவற்றை உன் கழுத்தைச் சுற்றிலும் கட்டிக்கொள். அவைகளை உன் இருதயத்தின்மேல் வைத்துக்கொள். நீ எங்கே சென்றாலும் அவர்களின் போதனைகள் உனக்கு வழிகாட்டும். நீ தூங்கும்போதும் அவை உன்னைக் கவனித்துக்கொள்ளும். நீ விழித்து எழுந்ததும் அவை உன்னோடு பேசி உனக்கு வழிகாட்டும். உன் பெற்றோர்களின் கட்டளைகளும் போதனைகளும் உனக்குச் சரியான பாதையைக் காட்டும் விளக்குகளைப் போன்றவை. அவை உன்னைத் திருத்தும்; வாழ்க்கைக்கான பாதையில் நீ செல்ல உனக்குப் பயிற்சி தரும்.
நீதிமொழிகள் 6:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும். பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான். அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள். நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும். கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.