என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால்,
நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால்,
நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய்,
உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய்.
என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால்,
நீ உன்னை விடுவித்துக்கொள்ள
நீ போய் உன்னைத் தாழ்த்தி,
உன் அயலான் களைப்படையும் வரை வேண்டிக்கொள்.
அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும்,
உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே.
வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல,
வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு.
சோம்பேறியே, நீ எறும்பிடம் போய்,
அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு!
அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ,
அதிகாரியோ இல்லை.
அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது,
அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது.
சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்?
நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்?
கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன்,
கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால்,
வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்;
பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.
வீணனும் கயவனுமானவன்,
வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான்.
அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி,
தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து,
தனது விரல்களால் சைகை காட்டுகிறான்.
அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்;
அவன் எப்பொழுதும் பிரிவினையைத் தூண்டிவிடுகிறான்.
அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்;
மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான்.
யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு,
இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது:
கர்வமுள்ள கண்கள்,
பொய்பேசும் நாவு,
குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள்,
கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம்,
தீமைசெய்ய விரையும் கால்கள்,
பொய்ச்சாட்சி,
சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர்.
என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள்,
உன் தாயின் போதனையை விட்டுவிடாதே.
அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்;
அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.
நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்;
நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்;
நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும்.
ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு,
இந்த போதனை ஒரு வெளிச்சம்,
நற்கட்டுப்பாடும் கண்டித்தலும்
வாழ்வுக்கு வழி.