என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று,
அந்நியனுக்கு உறுதியளித்தால்,
நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய்,
உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால்,
நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும்,
உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல்,
உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி,
அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல,
நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய்,
அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும்,
கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து,
அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்?
எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,
இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும்,
உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி,
தன்னுடைய கால்களால் பேசி,
தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.
அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு;
இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து,
வழக்குகளை உண்டாக்குகிறான்.
ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்;
உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.
ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார்,
ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு,
குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை,
மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம்,
தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால்,
பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி,
சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.
என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்;
உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.
அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள்.
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்;
நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்;
நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.
கட்டளையே விளக்கு,
வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.