நீதிமொழிகள் 29:4-27

நீதிமொழிகள் 29:4-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அரசன் நியாயத்தினால் நாட்டை நிலைநிறுத்துகிறான்; ஆனால் இலஞ்சத்தின்மேல் பேராசை கொண்டவர்கள் நாட்டை அழிக்கிறார்கள். தனக்கு அடுத்திருப்போரை முகஸ்துதி செய்கிறவர்கள், அவருடைய கால்களுக்கு வலையை விரிக்கிறார்கள். தீயவர் தங்கள் பாவத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள். நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களுக்கு அந்த அக்கறையில்லை. ஏளனம் செய்பவர்கள் பட்டணத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் கோபத்தை விலக்குகிறார்கள். ஞானமுள்ளவர் மூடரை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனால், மூடர் சினங்கொண்டு கேலிசெய்வார், அங்கு அமைதி இருக்காது. இரத்தவெறியர் உத்தமமானவர்களை வெறுக்கிறார்கள்; நீதிமான்களைக் கொல்லும்படி தேடுகிறார்கள். மதியீனர்கள் தம் கோபத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை அடக்கிக் கொள்கிறார்கள். ஒரு ஆளுநர் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவருடைய ஊழியர்கள் எல்லோரும் கொடியவராவார்கள். ஏழைக்கும் அவரை ஒடுக்கிறவருக்கும் பொதுவானது ஒன்று உண்டு: யெகோவாவே அந்த இருவரின் கண்களுக்கும் பார்வையைக் கொடுத்திருக்கிறார். அரசன் ஏழைகளுக்கு நியாயத்துடன் தீர்ப்பளித்தால், அவனுடைய சிங்காசனம் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பிரம்பும் கண்டனமும் ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் தன் விருப்பப்படி வளரவிடப்படுகிற பிள்ளையோ, தன் தாய்க்கு அவமானத்தைக் கொண்டுவரும். கொடியவர்கள் பெருகும்போது பாவமும் பெருகும், ஆனால் நீதிமான்கள் அவர்களுடைய வீழ்ச்சியைக் காண்பார்கள். உன் பிள்ளைகளை கண்டித்துத் திருத்து, அவர்கள் உனக்கு மன ஆறுதலைக் கொடுப்பார்கள்; அவர்கள் உன் மனதை சந்தோஷப்படுத்துவார்கள். இறைவெளிப்பாடு இல்லாத இடத்தில் மக்கள் கட்டுக்கடங்காதிருப்பார்கள்; ஆனால் ஞானத்தின் சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வேலைக்காரர்களை வெறும் வார்த்தையினால் திருத்தமுடியாது; அவர்கள் அதை விளங்கிக்கொண்டாலும் அதை கவனத்தில் கொள்ளமாட்டார்கள். பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம். ஒருவர் தன் வேலைக்காரர்களை இளமையில் கட்டுப்பாடில்லாமல் விட்டால், இறுதியில் அவர்கள் ஆணவம் பிடித்தவர்களாவார்கள். கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; முற்கோபிகள் அநேக பாவங்களைச் செய்கிறார்கள். ஒருவருடைய அகந்தை அவரை வீழ்த்தும், ஆனால் மனத்தாழ்மை கனத்தைக் கொண்டுவரும். திருடர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்கள் தங்களுக்கே பகைவராய் இருக்கிறார்கள்; அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டதினால் சாட்சி சொல்லத் துணியமாட்டார்கள். மனிதருக்குப் பயப்படுவது கண்ணியாயிருக்கும்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அநேகர் ஆளுநரின் தயவை தேடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடமிருந்தே மனிதர் நியாயத்தைப் பெறுகிறார்கள். நீதிமான்கள் நேர்மையற்றவர்களை வெறுக்கிறார்கள்; கொடியவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள்.

நீதிமொழிகள் 29:4-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான். நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை. இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள். மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள். தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார். ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும். பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான். தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான். கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன். மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான். திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான். மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும். நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

நீதிமொழிகள் 29:4-27 பரிசுத்த பைபிள் (TAERV)

ராஜா நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் ராஜா சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் ராஜாவுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும். ஒருவன் தான் விரும்புவதைத் தந்திரமான வார்த்தைகளைப் பேசிப் பெறமுயன்றால் அவன் தனக்குத்தானே வலைவிரிக்கிறான். தீயவர்கள் தம் சொந்தப் பாவங்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பாடிக்கொண்டும், மகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள். நல்லவர்கள் ஏழை ஜனங்களுக்கு நேர்மையான காரியங்களைச் செய்யவே விரும்புகின்றனர். தீயவர்களோ இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்றவர்களைவிடத் தான் பெரியவன் என்று நினைப்பவன் பல துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறான். அவர்களால் முழு நகரத்தையுமே குழப்பத்தில் ஆழ்த்த முடியும். ஆனால் ஞானம் உள்ளவர்களோ சமாதானத்தை உருவாக்க முடியும். ஞானமுள்ளவன் முட்டாளோடு ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிசெய்தால், அந்த முட்டாள் வாதம்செய்து முட்டாள்தனமாகப் பேசுவான். இருவரும் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள். கொலைக்காரர்கள் நேர்மையானவர்களை எப்பொழுதும் வெறுக்கின்றனர். அவர்கள் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் கொலைசெய்யப் பார்க்கிறார்கள். ஒரு முட்டாள் விரைவில் கோபம் அடைகிறான். ஆனால் ஞானமுள்ளவனோ பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறான். ஆள்பவன் பொய்யைக் கேட்டுக்கொள்வானேயானால், அவனது அதிகாரிகளும் தீயவர்களாகிவிடுகின்றனர். ஏழையும் ஏழையிடம் திருடுபவனும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். இருவரையும் கர்த்தரே படைத்துள்ளார். ராஜா ஏழைகளிடம் நேர்மையாக இருந்தால் அவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான். பிள்ளைகளுக்கு அடியும், போதனையும் நல்லது. தம் பிள்ளைகளை எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று பெற்றோர் விட்டுவிட்டால், அப்பிள்ளைகள் தம் தாய்க்கு அவமானத்தையே தருவார்கள். தீயவர்கள் நாட்டை ஆண்டால், எங்கும் பாவமே நிறைந்திருக்கும். இறுதியில் நல்லவர்களே வெல்வார்கள். உன் குமாரன் தவறு செய்யும்போது அவனைத் தண்டித்துவிடு. பிறகு அவனைப்பற்றி நீ பெருமைப்படலாம். அவன் உன்னை அவமானப்படுத்தமாட்டான். ஒரு நாடு தேவனால் வழி நடத்தப்படாவிட்டால், அந்நாட்டில் சமாதானம் இருக்காது. ஆனால், தேவனுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் நாடு மகிழ்ச்சி அடையும். நீ வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் வேலைக்காரன் பாடம் கற்றுக்கொள்ளமாட்டான். அவன் உன் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் கீழ்ப்படியமாட்டான். சிந்தனை செய்யாமல் பேசுபவனுக்கு நம்பிக்கையில்லை. இதைவிட முட்டாளுக்கு நம்பிக்கையுண்டு. நீ உனது வேலைக்காரனின் விருப்பப்படி எல்லாவற்றையும் கொடுப்பாயானால், இறுதியில் அவன் நல்ல வேலைக்காரனாக இருக்கமாட்டான். கோபமுள்ளவன் துன்பத்திற்குக் காரணமாகிறான். விரைவில் கோபம்கொள்கிறவன் பல பாவங்களுக்குப் பொறுப்பாகிறான். மற்றவர்களைவிடத் தன்னைப் பெரியவனாக ஒருவன் நினைத்துக்கொண்டால், அந்த எண்ணமே அவனை அழித்துவிடும். ஆனால் ஒருவன் பணிவாக இருக்கும்போது, மற்றவர்கள் அவனை மதிப்பார்கள். சேர்ந்து வேலைசெய்யும் இரண்டு திருடர்கள் பகைவர்களாக இருக்கிறார்கள். ஒருவன் அடுத்தவனை பயமுறுத்தி மிரட்டுவான். எனவே வழக்கு மன்றத்தில் உண்மையைச் சொல்லும்படி வற்புறுத்தப்பட்டால் அவன் வாயைத் திறந்து பேசவே பயப்படுவான். அச்சம் என்பது வலையைப் போன்றது. ஆனால் நீ கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தால் பாதுகாப்பாக இருப்பாய். ஆள்வோரோடு நட்புக்கொள்ள பலர் விரும்புவார்கள். ஆனால் கர்த்தர் ஒருவரே ஜனங்களைச் சரியாக நியாயந்தீர்க்கிறார். நேர்மையற்றவர்களை நல்லவர்கள் வெறுக்கின்றனர். தீயவர்களோ உண்மையுள்ளவர்களை வெறுக்கின்றனர்.

நீதிமொழிகள் 29:4-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான். பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான். நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான். பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள். ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை. இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள். மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள். தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்கொடுக்கிறார். ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும். பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான். துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான். தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம். ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான். கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன். மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான். திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான். மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும். நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

நீதிமொழிகள் 29:4-27

நீதிமொழிகள் 29:4-27 TAOVBSI