நீதி 29:4-27

நீதி 29:4-27 IRVTAM

நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான். நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை. இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள். மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள். தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார். ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும். பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான். தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான். கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன். மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான். திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான். மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும். நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.