நீதிமொழிகள் 29:4-27

நீதிமொழிகள் 29:4-27 TAERV

ராஜா நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் ராஜா சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் ராஜாவுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும். ஒருவன் தான் விரும்புவதைத் தந்திரமான வார்த்தைகளைப் பேசிப் பெறமுயன்றால் அவன் தனக்குத்தானே வலைவிரிக்கிறான். தீயவர்கள் தம் சொந்தப் பாவங்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பாடிக்கொண்டும், மகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள். நல்லவர்கள் ஏழை ஜனங்களுக்கு நேர்மையான காரியங்களைச் செய்யவே விரும்புகின்றனர். தீயவர்களோ இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்றவர்களைவிடத் தான் பெரியவன் என்று நினைப்பவன் பல துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறான். அவர்களால் முழு நகரத்தையுமே குழப்பத்தில் ஆழ்த்த முடியும். ஆனால் ஞானம் உள்ளவர்களோ சமாதானத்தை உருவாக்க முடியும். ஞானமுள்ளவன் முட்டாளோடு ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிசெய்தால், அந்த முட்டாள் வாதம்செய்து முட்டாள்தனமாகப் பேசுவான். இருவரும் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள். கொலைக்காரர்கள் நேர்மையானவர்களை எப்பொழுதும் வெறுக்கின்றனர். அவர்கள் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் கொலைசெய்யப் பார்க்கிறார்கள். ஒரு முட்டாள் விரைவில் கோபம் அடைகிறான். ஆனால் ஞானமுள்ளவனோ பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறான். ஆள்பவன் பொய்யைக் கேட்டுக்கொள்வானேயானால், அவனது அதிகாரிகளும் தீயவர்களாகிவிடுகின்றனர். ஏழையும் ஏழையிடம் திருடுபவனும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். இருவரையும் கர்த்தரே படைத்துள்ளார். ராஜா ஏழைகளிடம் நேர்மையாக இருந்தால் அவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான். பிள்ளைகளுக்கு அடியும், போதனையும் நல்லது. தம் பிள்ளைகளை எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று பெற்றோர் விட்டுவிட்டால், அப்பிள்ளைகள் தம் தாய்க்கு அவமானத்தையே தருவார்கள். தீயவர்கள் நாட்டை ஆண்டால், எங்கும் பாவமே நிறைந்திருக்கும். இறுதியில் நல்லவர்களே வெல்வார்கள். உன் குமாரன் தவறு செய்யும்போது அவனைத் தண்டித்துவிடு. பிறகு அவனைப்பற்றி நீ பெருமைப்படலாம். அவன் உன்னை அவமானப்படுத்தமாட்டான். ஒரு நாடு தேவனால் வழி நடத்தப்படாவிட்டால், அந்நாட்டில் சமாதானம் இருக்காது. ஆனால், தேவனுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் நாடு மகிழ்ச்சி அடையும். நீ வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் வேலைக்காரன் பாடம் கற்றுக்கொள்ளமாட்டான். அவன் உன் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் கீழ்ப்படியமாட்டான். சிந்தனை செய்யாமல் பேசுபவனுக்கு நம்பிக்கையில்லை. இதைவிட முட்டாளுக்கு நம்பிக்கையுண்டு. நீ உனது வேலைக்காரனின் விருப்பப்படி எல்லாவற்றையும் கொடுப்பாயானால், இறுதியில் அவன் நல்ல வேலைக்காரனாக இருக்கமாட்டான். கோபமுள்ளவன் துன்பத்திற்குக் காரணமாகிறான். விரைவில் கோபம்கொள்கிறவன் பல பாவங்களுக்குப் பொறுப்பாகிறான். மற்றவர்களைவிடத் தன்னைப் பெரியவனாக ஒருவன் நினைத்துக்கொண்டால், அந்த எண்ணமே அவனை அழித்துவிடும். ஆனால் ஒருவன் பணிவாக இருக்கும்போது, மற்றவர்கள் அவனை மதிப்பார்கள். சேர்ந்து வேலைசெய்யும் இரண்டு திருடர்கள் பகைவர்களாக இருக்கிறார்கள். ஒருவன் அடுத்தவனை பயமுறுத்தி மிரட்டுவான். எனவே வழக்கு மன்றத்தில் உண்மையைச் சொல்லும்படி வற்புறுத்தப்பட்டால் அவன் வாயைத் திறந்து பேசவே பயப்படுவான். அச்சம் என்பது வலையைப் போன்றது. ஆனால் நீ கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தால் பாதுகாப்பாக இருப்பாய். ஆள்வோரோடு நட்புக்கொள்ள பலர் விரும்புவார்கள். ஆனால் கர்த்தர் ஒருவரே ஜனங்களைச் சரியாக நியாயந்தீர்க்கிறார். நேர்மையற்றவர்களை நல்லவர்கள் வெறுக்கின்றனர். தீயவர்களோ உண்மையுள்ளவர்களை வெறுக்கின்றனர்.