நீதிமொழிகள் 27:1-16
நீதிமொழிகள் 27:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே, ஒரு நாள் என்னத்தைக் கொண்டுவரும் என்று உனக்குத் தெரியாதே. உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும். உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும். கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும். கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது. மறைவான அன்பைவிட, வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது. நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள், ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை. திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்; பசியால் வாடுபவனுக்கோ கசப்பாயிருப்பதும் சுவையாயிருக்கும். தன் கூட்டைவிட்டு அலைந்து திரிகிற பறவையைப் போலவே, வீட்டைவிட்டு அலைகிற மனிதரும் இருக்கிறார்கள். வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல, ஒருவருடைய நண்பரின் அருமை இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து வெளிப்படுகிறது. நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே, உனக்குப் பேராபத்து வரும்போது உன் குடும்பத்தாரின் வீட்டிற்கு உதவி தேடிப்போகதே; தொலைவில் இருக்கும் உன் குடும்பத்தாரைவிட, அருகில் இருக்கும் அயலாரே மேல். என் மகனே, நீ ஞானமுள்ளவனாயிருந்து என் இருதயத்தை சந்தோஷப்படுத்து; அப்பொழுது என்னை மதிக்காதவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியும். விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள், வேறுநாட்டுப் பெண்ணுக்காக அதைச் செய்தால் அடைமானமாகவே அதை வைத்துக்கொள். ஒருவன் அதிகாலையில் தன் அயலானை அதிக சத்தமிட்டு ஆசீர்வதித்தால், அது சாபமாகவே எண்ணப்படும். சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்; அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும், கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலவும் இருக்கும்.
நீதிமொழிகள் 27:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே. உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம். கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்? மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும். தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான். வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன். என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து. விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள். ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான பெண்ணும் சரி. அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
நீதிமொழிகள் 27:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)
எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய். கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது. கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது. வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது. உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான். உனக்குப் பசி இல்லாதபோது, நீ தேனைக்கூட பருக முடியாது. ஆனால் நீ பசியோடு இருந்தால் சுவையற்றவற்றையும் கூட தின்றுவிடுவாய். ஒருவன் வீட்டைவிட்டு விலகியிருப்பது கூட்டைவிட்டுப் பிரிந்து இருக்கிற பறவையைப் போன்றதாகும். மணப்பொருட்களும் இனிய வாசனைப் பொருட்களும் உன்னை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் துன்பங்களோ உனது அமைதியான மனதை அழித்துவிடும். நீ உனது நண்பர்களையும் உனது தந்தையின் நண்பர்களையும் மறந்துவிடாதே. உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ளவனிடம் சென்று உதவி கேட்பது நல்லது. என் மகனே, ஞானியாக இரு. அது என்னை மகிழ்ச்சிப்படுத்தும். அப்போது என்னை விமர்சிக்கிற எவனுக்கும் நான் பதில் சொல்ல இயலும். துன்பம் வருவதை உணர்ந்து ஞானிகள் விலகிவிடுவார்கள். அறிவற்றவர்களோ நேராகப் போய் துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு அதனால் பாடுபடுகிறார்கள். அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய். நீ உனது அயலானை உரத்த குரலில், “காலை வணக்கம்” கூறி எழுப்பாதே. இது அவனை எரிச்சல்படுத்தும். அவன் இதனை வாழ்த்தாக எடுத்துக்கொள்ளாமல் சாபமாக எடுத்துக்கொள்வான். எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள். அவளைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
நீதிமொழிகள் 27:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே. உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம். உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும். தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான். பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி. என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து, விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள். ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.