நீதிமொழி 27:1-16

நீதிமொழி 27:1-16 TCV

நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே, ஒரு நாள் என்னத்தைக் கொண்டுவரும் என்று உனக்குத் தெரியாதே. உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும். உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும். கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும். கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது. மறைவான அன்பைவிட, வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது. நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள், ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை. திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்; பசியால் வாடுபவனுக்கோ கசப்பாயிருப்பதும் சுவையாயிருக்கும். தன் கூட்டைவிட்டு அலைந்து திரிகிற பறவையைப் போலவே, வீட்டைவிட்டு அலைகிற மனிதரும் இருக்கிறார்கள். வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல, ஒருவருடைய நண்பரின் அருமை இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து வெளிப்படுகிறது. நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே, உனக்குப் பேராபத்து வரும்போது உன் குடும்பத்தாரின் வீட்டிற்கு உதவி தேடிப்போகதே; தொலைவில் இருக்கும் உன் குடும்பத்தாரைவிட, அருகில் இருக்கும் அயலாரே மேல். என் மகனே, நீ ஞானமுள்ளவனாயிருந்து என் இருதயத்தை சந்தோஷப்படுத்து; அப்பொழுது என்னை மதிக்காதவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியும். விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள், வேறுநாட்டுப் பெண்ணுக்காக அதைச் செய்தால் அடைமானமாகவே அதை வைத்துக்கொள். ஒருவன் அதிகாலையில் தன் அயலானை அதிக சத்தமிட்டு ஆசீர்வதித்தால், அது சாபமாகவே எண்ணப்படும். சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்; அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும், கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலவும் இருக்கும்.