நீதிமொழிகள் 27:1-16

நீதிமொழிகள் 27:1-16 TAERV

எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய். கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது. கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது. வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது. உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான். உனக்குப் பசி இல்லாதபோது, நீ தேனைக்கூட பருக முடியாது. ஆனால் நீ பசியோடு இருந்தால் சுவையற்றவற்றையும் கூட தின்றுவிடுவாய். ஒருவன் வீட்டைவிட்டு விலகியிருப்பது கூட்டைவிட்டுப் பிரிந்து இருக்கிற பறவையைப் போன்றதாகும். மணப்பொருட்களும் இனிய வாசனைப் பொருட்களும் உன்னை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் துன்பங்களோ உனது அமைதியான மனதை அழித்துவிடும். நீ உனது நண்பர்களையும் உனது தந்தையின் நண்பர்களையும் மறந்துவிடாதே. உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ளவனிடம் சென்று உதவி கேட்பது நல்லது. என் மகனே, ஞானியாக இரு. அது என்னை மகிழ்ச்சிப்படுத்தும். அப்போது என்னை விமர்சிக்கிற எவனுக்கும் நான் பதில் சொல்ல இயலும். துன்பம் வருவதை உணர்ந்து ஞானிகள் விலகிவிடுவார்கள். அறிவற்றவர்களோ நேராகப் போய் துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு அதனால் பாடுபடுகிறார்கள். அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய். நீ உனது அயலானை உரத்த குரலில், “காலை வணக்கம்” கூறி எழுப்பாதே. இது அவனை எரிச்சல்படுத்தும். அவன் இதனை வாழ்த்தாக எடுத்துக்கொள்ளாமல் சாபமாக எடுத்துக்கொள்வான். எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள். அவளைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.