நீதிமொழிகள் 12:2-15

நீதிமொழிகள் 12:2-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார். தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது. நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள். நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை. கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன, ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும். கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள், ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும். ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார். உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல். நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை. தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள். தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும். தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள். ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார். மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.

நீதிமொழிகள் 12:2-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது. குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

நீதிமொழிகள் 12:2-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார். தீயவர்கள் என்றென்றும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆனால் நல்லவர்களோ பாதுகாப்பாக இருக்கின்றனர். நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள். நல்லவர்கள் தாம் செய்யத் திட்டமிட்டவற்றைச் சரியாகவும் நேர்மையாகவும் செய்துவிடுகின்றனர். ஆனால் தீயவர்கள் சொல்லுகின்றவற்றை மட்டும் நம்பாதே. தீயவர்கள் தம் வார்த்தைகளால் பிறரைப் புண்படுத்துவார்கள். ஆனால் நல்லவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும். தீயவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களில் எதுவும் மிச்சம் இராது. ஆனால் நல்லவர்களை ஜனங்கள் அவர்கள் காலத்திற்குப் பின்பும் நீண்ட காலம் நினைவுகூருவார்கள். ஞானமுள்ளவர்களை ஜனங்கள் போற்றுவார்கள். ஆனால் அறிவில்லாதவர்களை ஜனங்கள் மதிப்பதில்லை. ஒருவன் ஆகாரமில்லாதவனாக இருந்தும் தன்னை முக்கிய மனிதனாகக் காட்டுவதைக் காட்டிலும் கடினமாக உழைக்கும் சாதாரண மனிதனாக இருப்பதே நல்லதாகும். நல்லவன் தன் மிருகங்களைக் கவனித்துக்கொள்கிறான். கெட்டவனோ கருணை உள்ளவனாக இருக்கமாட்டான். தன் நிலத்தில் வேலைசெய்கிற விவசாயி தனக்குரிய உணவைப் பெறுகிறான். ஆனால் பயனற்ற சிந்தனைகளில் நேரத்தை வீணாக்குகிறவன் முட்டாளாகிறான். தீயவர்கள் எப்போதும் தவறானவற்றைச் செய்யவே விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் வேர்களைப்போன்று ஆழமாகப் போகும் ஆற்றல் கொண்டுள்ளனர். தீயவன் முட்டாள்தனமானவற்றைச் சொல்லி அவ்வார்த்தைகளாலேயே அகப்பட்டுக்கொள்கிறான். ஆனால் நல்லவன் இத்தகைய துன்பங்களிலிருந்து தப்பித்துக்கொள்கிறான். ஒருவன் தான் சொல்கிற நல்லவற்றுக்காகப் பரிசுபெறுகிறான். இதுபோலவே அவன் செய்கிற வேலையும் பலனளிக்கிறது. அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.

நீதிமொழிகள் 12:2-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார். துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது. குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள். துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். தன் புத்திக்குத்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே. தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான். அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.