நீதிமொழிகள் 12:2-15

நீதிமொழிகள் 12:2-15 TAERV

நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார். தீயவர்கள் என்றென்றும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆனால் நல்லவர்களோ பாதுகாப்பாக இருக்கின்றனர். நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள். நல்லவர்கள் தாம் செய்யத் திட்டமிட்டவற்றைச் சரியாகவும் நேர்மையாகவும் செய்துவிடுகின்றனர். ஆனால் தீயவர்கள் சொல்லுகின்றவற்றை மட்டும் நம்பாதே. தீயவர்கள் தம் வார்த்தைகளால் பிறரைப் புண்படுத்துவார்கள். ஆனால் நல்லவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும். தீயவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களில் எதுவும் மிச்சம் இராது. ஆனால் நல்லவர்களை ஜனங்கள் அவர்கள் காலத்திற்குப் பின்பும் நீண்ட காலம் நினைவுகூருவார்கள். ஞானமுள்ளவர்களை ஜனங்கள் போற்றுவார்கள். ஆனால் அறிவில்லாதவர்களை ஜனங்கள் மதிப்பதில்லை. ஒருவன் ஆகாரமில்லாதவனாக இருந்தும் தன்னை முக்கிய மனிதனாகக் காட்டுவதைக் காட்டிலும் கடினமாக உழைக்கும் சாதாரண மனிதனாக இருப்பதே நல்லதாகும். நல்லவன் தன் மிருகங்களைக் கவனித்துக்கொள்கிறான். கெட்டவனோ கருணை உள்ளவனாக இருக்கமாட்டான். தன் நிலத்தில் வேலைசெய்கிற விவசாயி தனக்குரிய உணவைப் பெறுகிறான். ஆனால் பயனற்ற சிந்தனைகளில் நேரத்தை வீணாக்குகிறவன் முட்டாளாகிறான். தீயவர்கள் எப்போதும் தவறானவற்றைச் செய்யவே விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் வேர்களைப்போன்று ஆழமாகப் போகும் ஆற்றல் கொண்டுள்ளனர். தீயவன் முட்டாள்தனமானவற்றைச் சொல்லி அவ்வார்த்தைகளாலேயே அகப்பட்டுக்கொள்கிறான். ஆனால் நல்லவன் இத்தகைய துன்பங்களிலிருந்து தப்பித்துக்கொள்கிறான். ஒருவன் தான் சொல்கிற நல்லவற்றுக்காகப் பரிசுபெறுகிறான். இதுபோலவே அவன் செய்கிற வேலையும் பலனளிக்கிறது. அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.