நீதிமொழி 12:2-15

நீதிமொழி 12:2-15 TCV

நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார். தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது. நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள். நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை. கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன, ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும். கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள், ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும். ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார். உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல். நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை. தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள். தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும். தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள். ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார். மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.