எண்ணாகமம் 22:21-31

எண்ணாகமம் 22:21-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிலேயாம் காலையில் எழுந்து தன் கழுதைக்குச் சேணம் கட்டி மோவாபின் தலைவர்களுடன் போனான். அவன் போனதனால் இறைவன் மிகவும் கோபம்கொண்டார். யெகோவாவினுடைய தூதனானவர் அவனை எதிர்ப்பதற்காக வழியிலே நின்றார். பிலேயாம் தன் கழுதையில் போனான். அவனுடைய வேலைக்காரர் இருவரும் அவனுடன் போனார்கள். யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் நிற்பதைக் கழுதை கண்டது. அதனால் கழுதை வழியைவிட்டு விலகி, வயல்வெளியில் போனது. அப்பொழுது பிலேயாம் கழுதையை வீதியில் கொண்டுவருவதற்காக அதை அடித்தான். அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் இரண்டு திராட்சைத் தோட்டங்களின் இடையில் உள்ள ஒரு ஒடுங்கிய பாதையில் நின்றார். அந்த பாதையின் இரண்டு பக்கங்களிலும் மதில்கள் இருந்தன. கழுதை யெகோவாவினுடைய தூதனானவரைக் கண்டபோது, மதிலோடு ஒதுங்கி, பிலேயாமின் காலை நசுக்கியது. அதனால் மதிலோடு சேர்த்து அவன் கழுதையைத் திரும்பவும் அடித்தான். அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் இன்னும் முன்னோக்கிச் சென்று வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்ப முடியாத ஒரு ஒடுக்கமான இடத்தில் நின்றுகொண்டார். கழுதை யெகோவாவினுடைய தூதனானவரைக் கண்டபோது, பிலேயாமுக்குக் கீழே விழுந்து படுத்தது. அப்பொழுது அவன் மிகவும் கோபங்கொண்டு தன் கோலினால் அதை அடித்தான். அப்பொழுது யெகோவா கழுதையின் வாயைத் திறந்தார். கழுதை பிலேயாமைப் பார்த்து, “மூன்றுமுறை நீர் என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்” என்றது. அதற்குப் பிலேயாம் கழுதையைப் பார்த்து, “நீ என்னை ஏளனம்செய்கிறாய்; என் கையில் ஒரு வாள் இருக்குமானால் இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோடுவேன்” என்றான். அதற்குக் கழுதை பிலேயாமிடம், “இன்றுவரை நீர் எப்பொழுதுமே சவாரி செய்துவந்த உமது சொந்தக் கழுதையல்லவா நான்? உமக்கு இப்படிச் செய்யும் வழக்கம் என்னிடம் இருந்ததுண்டோ?” என்று கேட்டது. அதற்கு அவன், “இல்லை” என்றான். அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார். அங்கே யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் வீதியில் நிற்பதை அவன் கண்டான். உடனே பிலேயாம் வணங்கி, முகங்குப்புற விழுந்தான்.

எண்ணாகமம் 22:21-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடு கூடப் போனான். அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; யெகோவாவுடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள். யெகோவாவுடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போனது; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான். யெகோவாவுடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சைத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார். கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாக ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடு நெருக்கியது; திரும்பவும் அதை அடித்தான். அப்பொழுது யெகோவாவுடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார். கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் வந்தவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான். உடனே யெகோவா கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: “நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்” என்றது. அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: “நீ என்னை கேலி செய்துகொண்டு வருகிறாய்; என்னுடைய கையில் ஒரு பட்டயம்மட்டும் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன்” என்றான். கழுதை பிலேயாமை நோக்கி: “நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாவது நான் செய்தது உண்டா” என்றது. அதற்கு அவன்: “இல்லை” என்றான். அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற யெகோவாவுடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

எண்ணாகமம் 22:21-31 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான். பிலேயாம் தனது கழுதைமேல் சவாரி செய்தான். அவனோடு இரு வேலைக்காரர்களும் இருந்தனர். பிலேயாம் பயணம் செய்யும்போது, தேவன் கோபங்கொண்டார். எனவே கர்த்தருடைய தூதன் சாலையில் பிலேயாமின் முன்னால் நின்றான். தேவதூதன் பிலேயாமைத் தடுத்து நிறுத்தப் போனான். பிலேயாமின் கழுதை கர்த்தருடைய தூதன் சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. அத்தேவதூதன் தன் கையில் வாள் ஒன்றை வைத்திருந்தான். எனவே கழுதை சாலையிலிருந்து திரும்பி வயலில் இறங்கியது. பிலேயாமால் தேவதூதனைக் காணமுடியவில்லை; எனவே அவன் கழுதை மீது மிகுந்த கோபங்கொண்டான். அவன் கழுதையை அடித்து சாலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தினான். பிறகு கர்த்தருடைய தூதன் சாலை குறுகலாகும் இடத்தில் நின்றான். இது இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள இடம். சாலையின் இரு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. மீண்டும் அந்தக் கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே ஒரு சுவரை ஒட்டி நெருக்கமாகச் சென்றது. இதனால் பிலேயாமின் கால் சுவரோடு தேய்த்து உரசியது. ஆகையால் பிலேயாம் மீண்டும் கழுதையை அடித்தான். பிறகு கர்த்தருடைய தூதன் இன்னொரு இடத்தில் நின்றான். இது சாலை குறுகலாகும் இன்னொரு இடம். தேவதூதனைச் சுற்றிக்கொண்டு செல்ல சாலையில் போதுமான இடம் இல்லை. அந்தக் கழுதையால் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப முடியவில்லை. கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே, கழுதை பிலேயாம் தன்மேல் இருக்கும்போதே தரையில் படுத்துவிட்டது. இதனால் பிலேயாமுக்கு கழுதை மேல் மிகுந்த கோபம் வந்தது. எனவே அதனைத் தனது கைத்தடியால் அடித்தான். பிறகு கர்த்தர் கழுதையைப் பேசுமாறு செய்தார். அது பிலேயாமிடம், “என் மீது ஏன் கோபம் கொள்கிறீர்! நான் உமக்கு என்ன செய்துவிட்டேன்? என்னை மூன்று முறை அடித்துவிட்டீரே!” என்றது. பிலேயாம் கழுதையிடம், “என்னை நீ முட்டாளாக்குகின்றாய். இப்போது என் கையில் ஒரு வாள் இருந்தால் இந்த வேளையிலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று பதில் சொன்னான். ஆனால் கழுதையோ பிலேயாமிடம், “பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்துகொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியும்!” என்றது. இதற்குப் பிலேயாம், “இது உண்மைதான்” என்றான். பிறகு தேவன் பிலேயாமின் கண்களைத் திறந்து தூதனைப் பார்க்கும்படிச் செய்தார். கர்த்தருடைய தூதன் சாலையின் மேல் நின்றுகொண்டிருந்தான். அவன் தனது கையில் வாளை ஏந்தியிருந்தான். பிலேயாம் தரையில் பணிந்து வணங்கினான்.

எண்ணாகமம் 22:21-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடே கூடப் போனான். அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள். கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான். கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார். கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார். கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான். உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது. அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான். கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான். அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.