எண்ணாகமம் 22:21-31

எண்ணாகமம் 22:21-31 TAERV

மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான். பிலேயாம் தனது கழுதைமேல் சவாரி செய்தான். அவனோடு இரு வேலைக்காரர்களும் இருந்தனர். பிலேயாம் பயணம் செய்யும்போது, தேவன் கோபங்கொண்டார். எனவே கர்த்தருடைய தூதன் சாலையில் பிலேயாமின் முன்னால் நின்றான். தேவதூதன் பிலேயாமைத் தடுத்து நிறுத்தப் போனான். பிலேயாமின் கழுதை கர்த்தருடைய தூதன் சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. அத்தேவதூதன் தன் கையில் வாள் ஒன்றை வைத்திருந்தான். எனவே கழுதை சாலையிலிருந்து திரும்பி வயலில் இறங்கியது. பிலேயாமால் தேவதூதனைக் காணமுடியவில்லை; எனவே அவன் கழுதை மீது மிகுந்த கோபங்கொண்டான். அவன் கழுதையை அடித்து சாலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தினான். பிறகு கர்த்தருடைய தூதன் சாலை குறுகலாகும் இடத்தில் நின்றான். இது இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள இடம். சாலையின் இரு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. மீண்டும் அந்தக் கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே ஒரு சுவரை ஒட்டி நெருக்கமாகச் சென்றது. இதனால் பிலேயாமின் கால் சுவரோடு தேய்த்து உரசியது. ஆகையால் பிலேயாம் மீண்டும் கழுதையை அடித்தான். பிறகு கர்த்தருடைய தூதன் இன்னொரு இடத்தில் நின்றான். இது சாலை குறுகலாகும் இன்னொரு இடம். தேவதூதனைச் சுற்றிக்கொண்டு செல்ல சாலையில் போதுமான இடம் இல்லை. அந்தக் கழுதையால் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப முடியவில்லை. கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே, கழுதை பிலேயாம் தன்மேல் இருக்கும்போதே தரையில் படுத்துவிட்டது. இதனால் பிலேயாமுக்கு கழுதை மேல் மிகுந்த கோபம் வந்தது. எனவே அதனைத் தனது கைத்தடியால் அடித்தான். பிறகு கர்த்தர் கழுதையைப் பேசுமாறு செய்தார். அது பிலேயாமிடம், “என் மீது ஏன் கோபம் கொள்கிறீர்! நான் உமக்கு என்ன செய்துவிட்டேன்? என்னை மூன்று முறை அடித்துவிட்டீரே!” என்றது. பிலேயாம் கழுதையிடம், “என்னை நீ முட்டாளாக்குகின்றாய். இப்போது என் கையில் ஒரு வாள் இருந்தால் இந்த வேளையிலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று பதில் சொன்னான். ஆனால் கழுதையோ பிலேயாமிடம், “பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்துகொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியும்!” என்றது. இதற்குப் பிலேயாம், “இது உண்மைதான்” என்றான். பிறகு தேவன் பிலேயாமின் கண்களைத் திறந்து தூதனைப் பார்க்கும்படிச் செய்தார். கர்த்தருடைய தூதன் சாலையின் மேல் நின்றுகொண்டிருந்தான். அவன் தனது கையில் வாளை ஏந்தியிருந்தான். பிலேயாம் தரையில் பணிந்து வணங்கினான்.