எண்ணாகமம் 22:21-31

எண்ணாகமம் 22:21-31 TCV

பிலேயாம் காலையில் எழுந்து தன் கழுதைக்குச் சேணம் கட்டி மோவாபின் தலைவர்களுடன் போனான். அவன் போனதனால் இறைவன் மிகவும் கோபம்கொண்டார். யெகோவாவினுடைய தூதனானவர் அவனை எதிர்ப்பதற்காக வழியிலே நின்றார். பிலேயாம் தன் கழுதையில் போனான். அவனுடைய வேலைக்காரர் இருவரும் அவனுடன் போனார்கள். யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் நிற்பதைக் கழுதை கண்டது. அதனால் கழுதை வழியைவிட்டு விலகி, வயல்வெளியில் போனது. அப்பொழுது பிலேயாம் கழுதையை வீதியில் கொண்டுவருவதற்காக அதை அடித்தான். அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் இரண்டு திராட்சைத் தோட்டங்களின் இடையில் உள்ள ஒரு ஒடுங்கிய பாதையில் நின்றார். அந்த பாதையின் இரண்டு பக்கங்களிலும் மதில்கள் இருந்தன. கழுதை யெகோவாவினுடைய தூதனானவரைக் கண்டபோது, மதிலோடு ஒதுங்கி, பிலேயாமின் காலை நசுக்கியது. அதனால் மதிலோடு சேர்த்து அவன் கழுதையைத் திரும்பவும் அடித்தான். அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் இன்னும் முன்னோக்கிச் சென்று வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்ப முடியாத ஒரு ஒடுக்கமான இடத்தில் நின்றுகொண்டார். கழுதை யெகோவாவினுடைய தூதனானவரைக் கண்டபோது, பிலேயாமுக்குக் கீழே விழுந்து படுத்தது. அப்பொழுது அவன் மிகவும் கோபங்கொண்டு தன் கோலினால் அதை அடித்தான். அப்பொழுது யெகோவா கழுதையின் வாயைத் திறந்தார். கழுதை பிலேயாமைப் பார்த்து, “மூன்றுமுறை நீர் என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்” என்றது. அதற்குப் பிலேயாம் கழுதையைப் பார்த்து, “நீ என்னை ஏளனம்செய்கிறாய்; என் கையில் ஒரு வாள் இருக்குமானால் இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோடுவேன்” என்றான். அதற்குக் கழுதை பிலேயாமிடம், “இன்றுவரை நீர் எப்பொழுதுமே சவாரி செய்துவந்த உமது சொந்தக் கழுதையல்லவா நான்? உமக்கு இப்படிச் செய்யும் வழக்கம் என்னிடம் இருந்ததுண்டோ?” என்று கேட்டது. அதற்கு அவன், “இல்லை” என்றான். அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார். அங்கே யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் வீதியில் நிற்பதை அவன் கண்டான். உடனே பிலேயாம் வணங்கி, முகங்குப்புற விழுந்தான்.