எண்ணாகமம் 21:10-20

எண்ணாகமம் 21:10-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலர் தொடர்ந்து பயணம்பண்ணி ஒபோத்தில் முகாமிட்டார்கள். பின் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, சூரிய உதயதிசையில் மோவாபிற்கு எதிர்ப்புறமாயுள்ள பாலைவனத்தில் அபாரீம் மேடுகளில் முகாமிட்டார்கள். அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டு சாரேத் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பாலைவனத்தில் உள்ளதும், எமோரியரின் பிரதேசத்துக்குள் நீண்டு செல்கிறதுமான அர்னோன் ஆற்றின் அருகே முகாமிட்டார்கள். மோவாபுக்கும், எமோரியருக்கும் இடையில் மோவாபின் எல்லையாக அர்னோன் ஆறு ஓடுகிறது. அதனால்தான் யெகோவாவினுடைய யுத்தங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதாவது: “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோனின் பள்ளத்தாக்கும் ஆர் என்னும் பட்டணம்வரை சென்று மோவாபின் எல்லை ஓரமாக சாய்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் மலைச்சரிவும்.” அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பேயேருக்குப் போனார்கள். “மக்களைக் கூடிவரச்செய்; அவர்களுக்கு நான் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன கிணறு அங்குதான் இருந்தது. அப்பொழுது இஸ்ரயேலர் பாடிய பாடலாவது: “கிணற்றுத் தண்ணீரே, பொங்கி வா! அதைக் குறித்துப் பாடுங்கள். பிரபுக்கள் வெட்டிய கிணற்றைக் குறித்தும், மக்களில் உயர்குடிப்பிறந்தோர் செங்கோல்களினாலும், கோல்களினாலும் தோண்டிய கிணற்றைக்குறித்துப் பாடுங்கள்.” அதன்பின் அவர்கள் பாலைவனத்திலிருந்து மத்தானாவுக்குப் போனார்கள். மத்தானாவிலிருந்து, நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும், பாமோத்திலிருந்து மோவாபின் பள்ளத்தாக்கிற்கும் போனார்கள். அங்கே பாழ் நிலத்திற்கு எதிர்த்தாற்போல், பிஸ்காவின் உச்சி இருந்தது.

எண்ணாகமம் 21:10-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் பயணப்பட்டுப்போய், ஓபோத்தில் முகாமிட்டார்கள். ஓபோத்திலிருந்து பயணம் செய்து, கிழக்குதிசைக்கு நேராக மோவாபுக்கு எதிரான வனாந்திரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள். அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், சேரேத் பள்ளத்தாக்கிலே முகாமிட்டார்கள். அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்திரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இந்தப்பக்கம் முகாமிட்டார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களுக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை. அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும், ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் யெகோவாவுடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது. அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; “மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். அப்பொழுது இஸ்ரவேலர்கள் பாடின பாட்டாவது: “ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள்” என்று பாடினார்கள். அந்த வனாந்திரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும், பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.

எண்ணாகமம் 21:10-20 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் பயணம் செய்து ஓபோத்தில் கூடாரம் போட்டனர். பிறகு அவர்கள் அதனை விட்டுப்போய் மோவாபுக்குக் கிழக்கே பாலைவனத்தில் அய் அபாரீமினில் தங்கினார்கள். பிறகு அங்கிருந்து பயணம் செய்து சாரோத் பள்ளத்தாக்கில் கூடாரம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று, அர்னோன் ஆற்றைக் கடந்து கூடாரம் போட்டனர், இந்த ஆறு அம்மோனியர்களின் எல்லையிலிருந்து புறப்படுகிறது. அந்தப் பள்ளத்தாக்கானது மோவாபியருக்கும் எமோரியருக்கும் எல்லையாக இருந்தது. இதனால்தான் கர்த்தருடைய யுத்தங்கள் என்ற நூலில் : “சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றின் பள்ளத்தாக்குகளும் ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் அந்த இடத்தையும் விட்டு பேயீருக்குப் போனார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில்தான் கர்த்தர் மோசேயிடம், “ஜனங்களை இங்கே கூட்டிவா அவர்களுக்கு தண்ணீர் வழங்குவேன்” என்றார். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் இந்தப் பாடலைப் பாடினார்கள்: “கிணறு, தண்ணீரால் நிரம்பி வழிகிறது! இதைப் பற்றி பாடுங்கள்! பெரிய மனிதர்கள் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள். முக்கிய தலைவர்களால் தோண்டப்பட்ட கிணறு இது. அவர்கள் தங்கள் ஆயுதங்களாலும் தடிகளாலும் அதைத் தோண்டினார்கள். பாலைவனத்தில் இது ஒரு அன்பளிப்பாகும்.” எனவே, அவர்கள் அந்தக் கிணற்றை “மாத்தனா” என்று அழைத்தனர். ஜனங்கள் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத்துக்குப் பயணம் செய்தனர். ஜனங்கள் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். அங்கே பிஸ்கா மலை உச்சியானது பாலைவனத்துக்கு மேலே தெரிந்தது.

எண்ணாகமம் 21:10-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள். ஓபோத்திலிருந்து பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள். அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை. அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும், ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள். அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும், பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.