எண்ணாகமம் 21:10-20

எண்ணாகமம் 21:10-20 TCV

இஸ்ரயேலர் தொடர்ந்து பயணம்பண்ணி ஒபோத்தில் முகாமிட்டார்கள். பின் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, சூரிய உதயதிசையில் மோவாபிற்கு எதிர்ப்புறமாயுள்ள பாலைவனத்தில் அபாரீம் மேடுகளில் முகாமிட்டார்கள். அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டு சாரேத் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பாலைவனத்தில் உள்ளதும், எமோரியரின் பிரதேசத்துக்குள் நீண்டு செல்கிறதுமான அர்னோன் ஆற்றின் அருகே முகாமிட்டார்கள். மோவாபுக்கும், எமோரியருக்கும் இடையில் மோவாபின் எல்லையாக அர்னோன் ஆறு ஓடுகிறது. அதனால்தான் யெகோவாவினுடைய யுத்தங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதாவது: “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோனின் பள்ளத்தாக்கும் ஆர் என்னும் பட்டணம்வரை சென்று மோவாபின் எல்லை ஓரமாக சாய்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் மலைச்சரிவும்.” அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பேயேருக்குப் போனார்கள். “மக்களைக் கூடிவரச்செய்; அவர்களுக்கு நான் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன கிணறு அங்குதான் இருந்தது. அப்பொழுது இஸ்ரயேலர் பாடிய பாடலாவது: “கிணற்றுத் தண்ணீரே, பொங்கி வா! அதைக் குறித்துப் பாடுங்கள். பிரபுக்கள் வெட்டிய கிணற்றைக் குறித்தும், மக்களில் உயர்குடிப்பிறந்தோர் செங்கோல்களினாலும், கோல்களினாலும் தோண்டிய கிணற்றைக்குறித்துப் பாடுங்கள்.” அதன்பின் அவர்கள் பாலைவனத்திலிருந்து மத்தானாவுக்குப் போனார்கள். மத்தானாவிலிருந்து, நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும், பாமோத்திலிருந்து மோவாபின் பள்ளத்தாக்கிற்கும் போனார்கள். அங்கே பாழ் நிலத்திற்கு எதிர்த்தாற்போல், பிஸ்காவின் உச்சி இருந்தது.