எண்ணாகமம் 21:10-20

எண்ணாகமம் 21:10-20 TAERV

இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் பயணம் செய்து ஓபோத்தில் கூடாரம் போட்டனர். பிறகு அவர்கள் அதனை விட்டுப்போய் மோவாபுக்குக் கிழக்கே பாலைவனத்தில் அய் அபாரீமினில் தங்கினார்கள். பிறகு அங்கிருந்து பயணம் செய்து சாரோத் பள்ளத்தாக்கில் கூடாரம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று, அர்னோன் ஆற்றைக் கடந்து கூடாரம் போட்டனர், இந்த ஆறு அம்மோனியர்களின் எல்லையிலிருந்து புறப்படுகிறது. அந்தப் பள்ளத்தாக்கானது மோவாபியருக்கும் எமோரியருக்கும் எல்லையாக இருந்தது. இதனால்தான் கர்த்தருடைய யுத்தங்கள் என்ற நூலில் : “சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றின் பள்ளத்தாக்குகளும் ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் அந்த இடத்தையும் விட்டு பேயீருக்குப் போனார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில்தான் கர்த்தர் மோசேயிடம், “ஜனங்களை இங்கே கூட்டிவா அவர்களுக்கு தண்ணீர் வழங்குவேன்” என்றார். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் இந்தப் பாடலைப் பாடினார்கள்: “கிணறு, தண்ணீரால் நிரம்பி வழிகிறது! இதைப் பற்றி பாடுங்கள்! பெரிய மனிதர்கள் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள். முக்கிய தலைவர்களால் தோண்டப்பட்ட கிணறு இது. அவர்கள் தங்கள் ஆயுதங்களாலும் தடிகளாலும் அதைத் தோண்டினார்கள். பாலைவனத்தில் இது ஒரு அன்பளிப்பாகும்.” எனவே, அவர்கள் அந்தக் கிணற்றை “மாத்தனா” என்று அழைத்தனர். ஜனங்கள் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத்துக்குப் பயணம் செய்தனர். ஜனங்கள் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். அங்கே பிஸ்கா மலை உச்சியானது பாலைவனத்துக்கு மேலே தெரிந்தது.