எண்ணாகமம் 16:41-50

எண்ணாகமம் 16:41-50 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் இஸ்ரயேலரின் முழுசமூகமும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடியது. “யெகோவாவின் மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள்” என்று அவர்கள் முறுமுறுத்தார்கள். மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடிவந்த அந்த மக்கள்சபை, சபைக் கூடாரத்தை நோக்கித் திரும்பியபோது, திடீரென மேகம் சபைக் கூடாரத்தை மூடியது. யெகோவாவின் மகிமையும் அவர்களுக்குக் காணப்பட்டது. அப்பொழுது மோசேயும், ஆரோனும் சபைக் கூடாரத்திற்குமுன் போனார்கள். யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் உடனே இவர்களை அழிக்கும்படி நீங்கள் இவர்களைவிட்டு விலகி அப்பால் போங்கள்” என்றார். ஆனால் அவர்களோ முகங்குப்புற விழுந்தார்கள். அப்பொழுது மோசே ஆரோனிடம், “நீ உன் தூபகிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தின் நெருப்பையும், நறுமணத்தூளையும் அதில் போட்டு, சபையாருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி அவர்களிடம் விரைந்து போ. யெகோவாவின் கோபம் வந்திருக்கிறது; கொள்ளைநோயும் தொடங்கிவிட்டது” என்றான். மோசே சொன்னபடியே ஆரோன் செய்து, சபைக்குள் ஓடிப்போனான். அங்கே கொள்ளைநோய் மக்கள் மத்தியில் தொடங்கியிருந்தது. ஆனாலும் ஆரோன் தூபமிட்டு அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். அவன் உயிரோடிருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையிலே நின்றான். அப்பொழுது கொள்ளைநோய் நின்றுபோயிற்று. கோராகைப் பின்பற்றிச் செத்தவர்களைவிட 14,700 பேர் வாதையினால் செத்தார்கள். கொள்ளைநோய் நின்றுவிட்டபடியால், ஆரோன் சபைக்கூடார வாசலில் இருந்து மோசேயிடம் திரும்பிவந்தான்.

எண்ணாகமம் 16:41-50 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள். சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது. மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்; அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். மோசே ஆரோனை நோக்கி: “நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்”; யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான். மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; மக்களுக்குள்ளே வாதை துவங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது. கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் 14,700 பேர். வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான்.

எண்ணாகமம் 16:41-50 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் இஸ்ரவேல் ஜனங்கள், மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டு, “நீங்கள் கர்த்தருடைய ஜனங்களைக் கொன்று விட்டீர்கள்” எனக் கூறினர். மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்று கொண்டு இருந்தனர். ஜனங்கள் அங்கே கூடி அவர்களுக்கு எதிராக முறையிட்டனர். ஆனால் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை நோக்கியபோது அதை மேகம் சூழ்ந்தது. அங்கே கர்த்தரின் மகிமை காணப்பட்டது. பிறகு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாக வந்தனர். மோசேயிடம் கர்த்தர், “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். நான் இவர்களை உடனே அழிக்கப்போகிறேன்” என்றார். எனவே மோசேயும் ஆரோனும் தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கினார்கள். பிறகு மோசே ஆரோனிடம், “உனது வெண்கலத் தூபகலசத்தை எடுத்துக்கொள், பலிபீடத்திலுள்ள நெருப்பை அதில் இடு, பின் நறுமணப் பொருளைப்போடு, அவற்றை ஜனங்களிடம் கொண்டு போய் காட்டு, அது அவர்களைத் சுத்தமாக்கும். அவர்கள் மேல் கர்த்தர் கோபமாக உள்ளார். அவர்களுக்கு துன்பம் ஏற்கெனவே தொடங்கி விட்டது” என்றான். ஆரோன் மோசே சொன்னபடி தூபகலசமும், நெருப்பும், நறுமணப் பொருட்களும் எடுத்துக்கொண்டு ஜனங்கள் மத்தியில் ஓடினான். ஆனால், ஏற்கெனவே நோய் அவர்களிடையே துவங்கிவிட்டது. எனவே ஆரோன் மரித்துப் போனவர்களுக்கும், இன்னும் உயிரோடு இருந்தவர்களுக்கும் இடையே நின்று அவர்களைத் சுத்தப்படுத்தவதற்குரியவற்றைச் செய்தான். நோயும் நிறுத்தப்பட்டது. ஆனால் 14,700 பேர் நோயால் மரித்துப்போனார்கள். கோரகினால் மரித்தவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை. எனவே நோய் நிறுத்தப்பட்டது. பின் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்ற மோசேயிடம் திரும்பி வந்தான்.

எண்ணாகமம் 16:41-50 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள் என்றார்கள். சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது. மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை தொடங்கிற்று என்றான். மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது. கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர். வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.