எண்ணாகமம் 16:41-50

எண்ணாகமம் 16:41-50 TCV

மறுநாள் இஸ்ரயேலரின் முழுசமூகமும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடியது. “யெகோவாவின் மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள்” என்று அவர்கள் முறுமுறுத்தார்கள். மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடிவந்த அந்த மக்கள்சபை, சபைக் கூடாரத்தை நோக்கித் திரும்பியபோது, திடீரென மேகம் சபைக் கூடாரத்தை மூடியது. யெகோவாவின் மகிமையும் அவர்களுக்குக் காணப்பட்டது. அப்பொழுது மோசேயும், ஆரோனும் சபைக் கூடாரத்திற்குமுன் போனார்கள். யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் உடனே இவர்களை அழிக்கும்படி நீங்கள் இவர்களைவிட்டு விலகி அப்பால் போங்கள்” என்றார். ஆனால் அவர்களோ முகங்குப்புற விழுந்தார்கள். அப்பொழுது மோசே ஆரோனிடம், “நீ உன் தூபகிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தின் நெருப்பையும், நறுமணத்தூளையும் அதில் போட்டு, சபையாருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி அவர்களிடம் விரைந்து போ. யெகோவாவின் கோபம் வந்திருக்கிறது; கொள்ளைநோயும் தொடங்கிவிட்டது” என்றான். மோசே சொன்னபடியே ஆரோன் செய்து, சபைக்குள் ஓடிப்போனான். அங்கே கொள்ளைநோய் மக்கள் மத்தியில் தொடங்கியிருந்தது. ஆனாலும் ஆரோன் தூபமிட்டு அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். அவன் உயிரோடிருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையிலே நின்றான். அப்பொழுது கொள்ளைநோய் நின்றுபோயிற்று. கோராகைப் பின்பற்றிச் செத்தவர்களைவிட 14,700 பேர் வாதையினால் செத்தார்கள். கொள்ளைநோய் நின்றுவிட்டபடியால், ஆரோன் சபைக்கூடார வாசலில் இருந்து மோசேயிடம் திரும்பிவந்தான்.