மாற்கு 6:17-29
மாற்கு 6:17-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில், ஏரோதுவே யோவானைக் கைதுசெய்ய உத்தரவிட்டு, அவனைக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். தான் திருமணம் செய்திருந்த தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தம் அவன் இதைச் செய்திருந்தான். யோவான் ஏரோதுவிடம், “உன் சகோதரனின் மனைவியை நீ வைத்திருப்பது மோசேயின் சட்டத்திற்கு மாறானது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு, யோவானைக் கொலைசெய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்பதை ஏரோது அறிந்து பயமடைந்ததினால், அவனைப் பாதுகாத்தான். யோவான் சொன்னதை ஏரோது கேட்டு மிகவும் குழப்பமடைந்தான்; இருப்பினும், அவன் சொல்லுவதற்குச் செவிகொடுக்க விரும்பினான். கடைசியாக, ஏரோதியாளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஏரோது தனது பிறந்த நாளிலே, தனது உயர் அதிகாரிகளுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயாவிலுள்ள முக்கியமானவர்களுக்கும் விருந்து ஒன்றைக் கொடுத்தான். ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடினாள். அவள் ஏரோதுக்கும் அவனுடைய விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன். நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாக இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அந்தச் சிறுமி வெளியே போய், தனது தாயிடம் இதைச் சொல்லி, “நான் எதைக் கேட்கவேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அவள், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்றாள். உடனே அந்தச் சிறுமி அரசனிடம் ஓடி, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, கொடுங்கள்” என்று கேட்டாள். அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தான் கொடுத்த ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும் அதை அவளுக்கு அவன் மறுக்க விரும்பவில்லை. எனவே அரசன் உடனே, யோவானின் தலையைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டு ஒரு காவற்காரனை அனுப்பினான். அவன் போய் சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டினான். அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தான். அவன் அதை அந்தச் சிறுமிக்குக் கொடுக்க, அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதை யோவானின் சீடர்கள் கேள்விப்பட்டு, வந்து அவனது உடலை எடுத்து கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தார்கள்.
மாற்கு 6:17-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது, யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான். ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது, ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி; நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்; உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான். அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
மாற்கு 6:17-29 பரிசுத்த பைபிள் (TAERV)
ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது. பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். ஏரோதியாளின் குமாரத்தி அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர். ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான். அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள். உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள். ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்.
மாற்கு 6:17-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது, யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக்காவலில் வைத்திருந்தான். ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று. அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டுவந்தான். பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்மநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது, ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள், அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்; நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான். அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்கமனதில்லாமல்; உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான். அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள். அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.