மாற்கு 6:17-29

மாற்கு 6:17-29 TCV

ஏனெனில், ஏரோதுவே யோவானைக் கைதுசெய்ய உத்தரவிட்டு, அவனைக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். தான் திருமணம் செய்திருந்த தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தம் அவன் இதைச் செய்திருந்தான். யோவான் ஏரோதுவிடம், “உன் சகோதரனின் மனைவியை நீ வைத்திருப்பது மோசேயின் சட்டத்திற்கு மாறானது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு, யோவானைக் கொலைசெய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்பதை ஏரோது அறிந்து பயமடைந்ததினால், அவனைப் பாதுகாத்தான். யோவான் சொன்னதை ஏரோது கேட்டு மிகவும் குழப்பமடைந்தான்; இருப்பினும், அவன் சொல்லுவதற்குச் செவிகொடுக்க விரும்பினான். கடைசியாக, ஏரோதியாளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஏரோது தனது பிறந்த நாளிலே, தனது உயர் அதிகாரிகளுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயாவிலுள்ள முக்கியமானவர்களுக்கும் விருந்து ஒன்றைக் கொடுத்தான். ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடினாள். அவள் ஏரோதுக்கும் அவனுடைய விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன். நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாக இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அந்தச் சிறுமி வெளியே போய், தனது தாயிடம் இதைச் சொல்லி, “நான் எதைக் கேட்கவேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அவள், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்றாள். உடனே அந்தச் சிறுமி அரசனிடம் ஓடி, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, கொடுங்கள்” என்று கேட்டாள். அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தான் கொடுத்த ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும் அதை அவளுக்கு அவன் மறுக்க விரும்பவில்லை. எனவே அரசன் உடனே, யோவானின் தலையைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டு ஒரு காவற்காரனை அனுப்பினான். அவன் போய் சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டினான். அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தான். அவன் அதை அந்தச் சிறுமிக்குக் கொடுக்க, அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதை யோவானின் சீடர்கள் கேள்விப்பட்டு, வந்து அவனது உடலை எடுத்து கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தார்கள்.

தொடர்புடைய காணொளிகள்