மாற்கு எழுதிய சுவிசேஷம் 6:17-29

மாற்கு எழுதிய சுவிசேஷம் 6:17-29 TAERV

ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது. பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். ஏரோதியாளின் குமாரத்தி அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர். ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான். அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள். உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள். ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்.

தொடர்புடைய காணொளிகள்