மாற்கு 3:20-35

மாற்கு 3:20-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு இயேசு, ஒரு வீட்டுக்குச் சென்றார்; மக்கள் மீண்டும் பெருங்கூட்டமாய் வந்ததினால், அவரும் அவருடைய சீடர்களும் சாப்பிடக்கூட இயலாதிருந்தார்கள். இயேசுவின் குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடிக்கப் போனார்கள். எருசலேமிலிருந்து வந்த மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது! பிசாசுகளின் தலைவனாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார், “சாத்தானைத் துரத்த சாத்தானால் எப்படி முடியும்? ஒரு அரசு தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்த அரசு நிலைபெறாது. ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்தக் குடும்பம் நிலைபெறாது. எனவே சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழுந்து பிளவுபட்டால், அவனால் நிலைத்து நிற்கமுடியாது; அவனுடைய முடிவு வந்துவிடும். முதலில் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளை எவராலும் அள்ளிக்கொண்டு போகமுடியாது. அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா அவதூறுகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். “தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் தம்மைப் பற்றி சொன்னதினாலேயே இயேசு இப்படிச் சொன்னார். அப்பொழுது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, இயேசுவை அழைத்துவர ஆளனுப்பினார்கள். மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றியிருந்தார்கள். அப்போது, போனவர்கள் அவரிடம், “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைத் தேடிவந்து வெளியே நிற்கிறார்கள்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்றார். பின்பு, இயேசு தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, “இதோ, என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! இறைவனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களே, என் சகோதரனும் சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.

மாற்கு 3:20-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது. அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே. ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே. சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே. பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும். உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார். அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி; தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.

மாற்கு 3:20-35 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர். இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர். எருசலேமில் இருந்து வந்த வேதபாரகர், “இயேசுவிடம் பெயல்செபூல் (பிசாசு) உள்ளது. பிசாசுகளின் தலைவனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தி பேய்களை விரட்டுகிறார்” என்றனர். ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். “சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார். ஒரு இராஜ்யம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு தொடர்ந்திருக்க முடியும்? ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்? இது போல் சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டு இருந்தால் அவன் நிலைத்திருக்க முடியாது. அதுவே அவன் முடிவு. “ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும். “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்தாவியை எவனாவது பழித்து உரைப்பானேயானால் அவனுக்கு என்றென்றைக்கும் மன்னிப்பே இல்லை. அவன் குற்றவாளியாகி என்றென்றைக்கும் குற்ற உணர்வுடையவனாக இருப்பான்” என்றார். வேதபாரகர் இயேசுவை “அசுத்த ஆவி பிடித்தவர்” என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார். பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான். இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

மாற்கு 3:20-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள். அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார். அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி; தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்