மாற்கு 3:20-35

மாற்கு 3:20-35 TCV

பின்பு இயேசு, ஒரு வீட்டுக்குச் சென்றார்; மக்கள் மீண்டும் பெருங்கூட்டமாய் வந்ததினால், அவரும் அவருடைய சீடர்களும் சாப்பிடக்கூட இயலாதிருந்தார்கள். இயேசுவின் குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடிக்கப் போனார்கள். எருசலேமிலிருந்து வந்த மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது! பிசாசுகளின் தலைவனாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார், “சாத்தானைத் துரத்த சாத்தானால் எப்படி முடியும்? ஒரு அரசு தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்த அரசு நிலைபெறாது. ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்தக் குடும்பம் நிலைபெறாது. எனவே சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழுந்து பிளவுபட்டால், அவனால் நிலைத்து நிற்கமுடியாது; அவனுடைய முடிவு வந்துவிடும். முதலில் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளை எவராலும் அள்ளிக்கொண்டு போகமுடியாது. அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா அவதூறுகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். “தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் தம்மைப் பற்றி சொன்னதினாலேயே இயேசு இப்படிச் சொன்னார். அப்பொழுது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, இயேசுவை அழைத்துவர ஆளனுப்பினார்கள். மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றியிருந்தார்கள். அப்போது, போனவர்கள் அவரிடம், “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைத் தேடிவந்து வெளியே நிற்கிறார்கள்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்றார். பின்பு, இயேசு தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, “இதோ, என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! இறைவனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களே, என் சகோதரனும் சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.

மாற்கு 3:20-35 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்