மாற் 3:20-35

மாற் 3:20-35 IRVTAM

பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது. அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே. ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே. சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே. பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும். உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார். அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி; தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.

மாற் 3:20-35 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்