மத்தேயு 4:1-17

மத்தேயு 4:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார். இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார். சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார். பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான். அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே,’ ” என்றான். அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார். மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான். “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.” இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ ” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார். அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார். அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது. இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே, இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 4:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான். அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார். அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: “நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: “நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்; அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார். அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள். யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார். கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 4:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று. அப்போது அவரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம், “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக் கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’ என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார். பின்பு பிசாசு இயேசுவைப் பரிசுத்த நகரமான எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். பிசாசு இயேசுவை தேவாலயத்தின் மிக உயரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனென்றால், “‘தேவன் உமக்காகத் தன் தூதர்களுக்குக் கட்டளையிடுவார், தூதர்களின் கரங்கள் உன்னைப் பற்றும். ஆகவே உன் கால்கள் பாறைகளில் மோதாது’ என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறது” எனக் கூறினான். அதற்கு இயேசு, “‘தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதில் சொன்னார். பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். பிறகு பிசாசு இயேசுவிடம், “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான். இயேசு பிசாசை நோக்கி, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்! “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார். எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர். யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்: “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும் யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில் யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா. பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர். ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும் அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.” அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.

மத்தேயு 4:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.