மத்தேயு 4:1-17

மத்தேயு 4:1-17 TCV

அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார். இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார். சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார். பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான். அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே,’ ” என்றான். அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார். மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான். “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.” இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ ” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார். அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார். அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது. இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே, இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 4:1-17