மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-17

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-17 TAERV

பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று. அப்போது அவரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம், “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக் கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’ என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார். பின்பு பிசாசு இயேசுவைப் பரிசுத்த நகரமான எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். பிசாசு இயேசுவை தேவாலயத்தின் மிக உயரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனென்றால், “‘தேவன் உமக்காகத் தன் தூதர்களுக்குக் கட்டளையிடுவார், தூதர்களின் கரங்கள் உன்னைப் பற்றும். ஆகவே உன் கால்கள் பாறைகளில் மோதாது’ என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறது” எனக் கூறினான். அதற்கு இயேசு, “‘தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதில் சொன்னார். பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். பிறகு பிசாசு இயேசுவிடம், “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான். இயேசு பிசாசை நோக்கி, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்! “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார். எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர். யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்: “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும் யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில் யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா. பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர். ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும் அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.” அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-17