மத்தேயு 24:1-14
மத்தேயு 24:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப் படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
மத்தேயு 24:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள். ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்குள்ள ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில் ‘நானே கிறிஸ்து,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வருவார்கள். அவர்கள் பலரை ஏமாற்றுவார்கள். நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் பயப்படாதபடி கவனமாயிருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே வேண்டும். ஆனால் முடிவு வருவதற்கோ, இன்னும் காலம் உண்டு. நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கு விரோதமாய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே. “அப்பொழுது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் நிமித்தம் நீங்கள் எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்படுவீர்கள். அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். ஒருவரையொருவர் அவர்கள் காட்டிக்கொடுக்கிறவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள். அநேக பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள். அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். ஆனால் முடிவுவரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். இறை அரசின் இந்த நற்செய்தி முழு உலகமும் அறியும்படி எல்லா ஜனங்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அதற்குப் பின்பே முடிவுவரும்.
மத்தேயு 24:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
மத்தேயு 24:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். இயேசு சீஷர்களை நோக்கி, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா? உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நாசமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும்” என்று கூறினார். பின்னர், இயேசு ஒலிவ மலையின்மீது ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். இயேசுவுடன் தனிமையில் இருக்க வந்த சீஷர்கள், அவரிடம், “இவை எப்பொழுது நடக்கும் என்று எங்களுக்குக் கூறுங்கள். நீர் மீண்டும் தோன்றப் போகிறதையும் உலகம் அழியும் என்பதையும் எங்களுக்கு உணர்த்த எம்மாதிரியான செயல் நடக்கும்?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு, “எச்சரிக்கையுடன் இருங்கள்! யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள். போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும். இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார். “பின்னர் மக்கள் உங்களை மோசமாக நடத்துவார்கள். துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் ஆட்சியாளர்களிடம் உங்களை ஒப்படைப்பார்கள். அனைவரும் உங்களை வெறுப்பர். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இவை அனைத்தும் உங்களுக்கு நிகழும். அக்காலக் கட்டத்தில், பலர் தாம் கொண்ட விசுவாசத்தை இழப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பி ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். உலகில் மேலும், மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். ஆனால் தொடர்ந்து இறுதிவரை உறுதியாய் இருப்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.