மத் 24:1-14

மத் 24:1-14 IRVTAM

இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.