மத்தேயு எழுதிய சுவிசேஷம் 24:1-14

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 24:1-14 TAERV

இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். இயேசு சீஷர்களை நோக்கி, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா? உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நாசமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும்” என்று கூறினார். பின்னர், இயேசு ஒலிவ மலையின்மீது ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். இயேசுவுடன் தனிமையில் இருக்க வந்த சீஷர்கள், அவரிடம், “இவை எப்பொழுது நடக்கும் என்று எங்களுக்குக் கூறுங்கள். நீர் மீண்டும் தோன்றப் போகிறதையும் உலகம் அழியும் என்பதையும் எங்களுக்கு உணர்த்த எம்மாதிரியான செயல் நடக்கும்?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு, “எச்சரிக்கையுடன் இருங்கள்! யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள். போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும். இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார். “பின்னர் மக்கள் உங்களை மோசமாக நடத்துவார்கள். துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் ஆட்சியாளர்களிடம் உங்களை ஒப்படைப்பார்கள். அனைவரும் உங்களை வெறுப்பர். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இவை அனைத்தும் உங்களுக்கு நிகழும். அக்காலக் கட்டத்தில், பலர் தாம் கொண்ட விசுவாசத்தை இழப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பி ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். உலகில் மேலும், மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். ஆனால் தொடர்ந்து இறுதிவரை உறுதியாய் இருப்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.