மத்தேயு 17:22-27
மத்தேயு 17:22-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே நான் உயிரோடே எழுப்பப்படுவேன்” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள். இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள். “ஆம் செலுத்துவார்!” என அவன் பதிலளித்தான். பேதுரு இயேசுவினிடத்தில் வீட்டிற்குள் வந்தபோது, இயேசுவே அதைப்பற்றி முதலாவதாகப் பேசத்தொடங்கினார்: “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார். “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே? ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு கடலுக்குப்போய் தூண்டிலைப்போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத்திற, அதற்குள் ‘நான்கு திராக்மா’ வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும், உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு!” என்றார்.
மத்தேயு 17:22-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள். அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே. ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.
மத்தேயு 17:22-27 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்னர், இயேசுவின் சீஷர்கள் கலிலேயாவில் சந்தித்தார்கள். இயேசு சீஷர்களிடம் சொன்னார், “மனித குமாரன் மனிதர்களின் வசம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் தேவ குமாரனைக் கொல்லுவார்கள். ஆனால் மூன்றாம் நாள் தேவ குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவார்” என்று சொன்னார். இயேசு கொலையாவார் என்பதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையுற்றனர். இயேசுவும் சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யூதர்கள் தேவாலயத்துக்குச் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் ஆட்கள் சிலர், கப்பர்நகூமில் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஆலயத்திற்குக் செலுத்தவேண்டிய வரியை செலுத்துகிறாரா?” என்று கேட்டனர். அதற்குப் பேதுரு, “ஆம், அவர் அந்த வரியைச் செலுத்துகிறார்” எனப் பதிலளித்தான். இயேசு தங்கியிருந்த வீட்டிற்குள் பேதுரு சென்றான். அவன் வாயைத் திறக்கும் முன்னமே, இயேசு, “மண்ணுலகில் இருக்கும் ராஜாக்கள் பலவகையான வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். வரி செலுத்துகிறவர்கள் யார்? ராஜாவின் பிள்ளைகள் வரி செலுத்துகிறார்களா? அல்லது மற்றவர்கள் வரி செலுத்துகிறார்களா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்” என்று பதில் உரைத்தான். பிறகு இயேசு, “மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், வரி வசூல் செய்யும் இவர்களை நாம் கோபமூட்ட வேண்டாம். எனவே, நான் கூறுகிறபடி வரியை செலுத்திவிடு. ஏரிக்குச் சென்று மீன் பிடி. நீ பிடிக்கும் முதலாவது மீனின் வாயைத் திறந்துபார். அதன் வாயினுள் நான்கு நாணயங்கள் கிடைக்கும். அந்நாணயங்களை எனக்கும் உனக்குமான வரியாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்திவிடு” என்று சொன்னார்.
மத்தேயு 17:22-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள். அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.