மத்தேயு எழுதிய சுவிசேஷம் 17:22-27

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 17:22-27 TAERV

பின்னர், இயேசுவின் சீஷர்கள் கலிலேயாவில் சந்தித்தார்கள். இயேசு சீஷர்களிடம் சொன்னார், “மனித குமாரன் மனிதர்களின் வசம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் தேவ குமாரனைக் கொல்லுவார்கள். ஆனால் மூன்றாம் நாள் தேவ குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவார்” என்று சொன்னார். இயேசு கொலையாவார் என்பதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையுற்றனர். இயேசுவும் சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யூதர்கள் தேவாலயத்துக்குச் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் ஆட்கள் சிலர், கப்பர்நகூமில் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஆலயத்திற்குக் செலுத்தவேண்டிய வரியை செலுத்துகிறாரா?” என்று கேட்டனர். அதற்குப் பேதுரு, “ஆம், அவர் அந்த வரியைச் செலுத்துகிறார்” எனப் பதிலளித்தான். இயேசு தங்கியிருந்த வீட்டிற்குள் பேதுரு சென்றான். அவன் வாயைத் திறக்கும் முன்னமே, இயேசு, “மண்ணுலகில் இருக்கும் ராஜாக்கள் பலவகையான வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். வரி செலுத்துகிறவர்கள் யார்? ராஜாவின் பிள்ளைகள் வரி செலுத்துகிறார்களா? அல்லது மற்றவர்கள் வரி செலுத்துகிறார்களா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்” என்று பதில் உரைத்தான். பிறகு இயேசு, “மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், வரி வசூல் செய்யும் இவர்களை நாம் கோபமூட்ட வேண்டாம். எனவே, நான் கூறுகிறபடி வரியை செலுத்திவிடு. ஏரிக்குச் சென்று மீன் பிடி. நீ பிடிக்கும் முதலாவது மீனின் வாயைத் திறந்துபார். அதன் வாயினுள் நான்கு நாணயங்கள் கிடைக்கும். அந்நாணயங்களை எனக்கும் உனக்குமான வரியாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்திவிடு” என்று சொன்னார்.