மத்தேயு 17:22-27

மத்தேயு 17:22-27 TCV

அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே நான் உயிரோடே எழுப்பப்படுவேன்” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள். இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள். “ஆம் செலுத்துவார்!” என அவன் பதிலளித்தான். பேதுரு இயேசுவினிடத்தில் வீட்டிற்குள் வந்தபோது, இயேசுவே அதைப்பற்றி முதலாவதாகப் பேசத்தொடங்கினார்: “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார். “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே? ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு கடலுக்குப்போய் தூண்டிலைப்போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத்திற, அதற்குள் ‘நான்கு திராக்மா’ வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும், உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு!” என்றார்.