லூக்கா 7:1-10

லூக்கா 7:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார். அங்கே நூற்றுக்குத் தலைவனின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தருவாயில் இருந்தான்; இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக்குரியவனாய் இருந்தான். நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவரை மிகவும் வேண்டிக்கொண்டு, “நீர் இதை அந்த அதிபதிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன். ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். எனவே இயேசு அவர்களுடன் சென்றார். அவனுடைய வீட்டிற்குச் சமீபமாய் அவர் வந்துகொண்டிருக்கையில் அந்த நூற்றுக்குத் தலைவன் தனது நண்பர்களை அவரிடத்தில் அனுப்பிச் சொல்லும்படி சொன்னதாவது: “ஆண்டவரே, சிரமம் வேண்டாம், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியற்றவன். ஆகையால் உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான். நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது, அந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை” என்றார். அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள்.

லூக்கா 7:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான். அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான். நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.

லூக்கா 7:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார். கப்பர்நகூமில் இராணுவ அதிகாரி ஒருவன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன் ஒருவன் நோயுற்றிருந்தான். அவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அந்த அதிகாரி அவ்வேலைக்காரனை மிகவும் நேசித்தான். அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான். அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அதிகாரிக்கு உதவுமாறு இயேசுவை அவசரமாக வேண்டினர். அவர்கள், “உம்முடைய உதவியைப் பெறும் அளவுக்கு இந்த அதிகாரி உண்மையிலேயே தகுதி வாய்ந்தவன்தான். அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர். எனவே இயேசு அந்த மனிதர்களோடு புறப்பட்டார். இயேசு அந்த அதிகாரியின் வீட்டை நெருங்குகையில் அதிகாரி தனது நண்பர்களை அனுப்பினான். அவர்களை இயேசுவிடம் “கர்த்தாவே, நீர் என் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. எங்கள் வீட்டிற்கு உம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் தகுதி உடையவன் அல்லன். அதனால்தான் நான் நேரிடையாக உம்மிடம் வரவில்லை. நீர் கட்டளையிடும். என் வேலைக்காரன் குணம் பெறுவான். உம்முடைய அதிகாரத்தை நான் அறிவேன். பிற மனிதர்களின் அதிகாரத்துக்குட்பட்ட மனிதன் நான். எனக்குக் கீழ் பல வீரர்கள் உண்டு. அவர்களில் ஒருவனை நான் ‘போ’ என்றால் போகிறான். மற்றொருவனை ‘வா’ என்றால் வருகிறான். என் வேலையாளிடம் ‘இதைச் செய்’ என்றால் உடனே அவன் கீழ்ப்படிகிறான்” என்று கூறுமாறு அனுப்பினான். இதைக் கேட்டபோது இயேசு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தன்னைத் தொடர்ந்து வருகிற மக்களை நோக்கித் திரும்பினார். “இஸ்ரவேல் மக்களிடம் கூட இல்லாத வேறெங்கும் காணப்படாத, உயர்ந்த விசுவாசத்தை இவனிடம் கண்டேன்” என்றார். இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர்.

லூக்கா 7:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான். அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.