லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:1-10

லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:1-10 TAERV

இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார். கப்பர்நகூமில் இராணுவ அதிகாரி ஒருவன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன் ஒருவன் நோயுற்றிருந்தான். அவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அந்த அதிகாரி அவ்வேலைக்காரனை மிகவும் நேசித்தான். அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான். அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அதிகாரிக்கு உதவுமாறு இயேசுவை அவசரமாக வேண்டினர். அவர்கள், “உம்முடைய உதவியைப் பெறும் அளவுக்கு இந்த அதிகாரி உண்மையிலேயே தகுதி வாய்ந்தவன்தான். அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர். எனவே இயேசு அந்த மனிதர்களோடு புறப்பட்டார். இயேசு அந்த அதிகாரியின் வீட்டை நெருங்குகையில் அதிகாரி தனது நண்பர்களை அனுப்பினான். அவர்களை இயேசுவிடம் “கர்த்தாவே, நீர் என் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. எங்கள் வீட்டிற்கு உம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் தகுதி உடையவன் அல்லன். அதனால்தான் நான் நேரிடையாக உம்மிடம் வரவில்லை. நீர் கட்டளையிடும். என் வேலைக்காரன் குணம் பெறுவான். உம்முடைய அதிகாரத்தை நான் அறிவேன். பிற மனிதர்களின் அதிகாரத்துக்குட்பட்ட மனிதன் நான். எனக்குக் கீழ் பல வீரர்கள் உண்டு. அவர்களில் ஒருவனை நான் ‘போ’ என்றால் போகிறான். மற்றொருவனை ‘வா’ என்றால் வருகிறான். என் வேலையாளிடம் ‘இதைச் செய்’ என்றால் உடனே அவன் கீழ்ப்படிகிறான்” என்று கூறுமாறு அனுப்பினான். இதைக் கேட்டபோது இயேசு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தன்னைத் தொடர்ந்து வருகிற மக்களை நோக்கித் திரும்பினார். “இஸ்ரவேல் மக்களிடம் கூட இல்லாத வேறெங்கும் காணப்படாத, உயர்ந்த விசுவாசத்தை இவனிடம் கண்டேன்” என்றார். இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:1-10 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்