லூக்கா 7:1-10

லூக்கா 7:1-10 TCV

கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார். அங்கே நூற்றுக்குத் தலைவனின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தருவாயில் இருந்தான்; இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக்குரியவனாய் இருந்தான். நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவரை மிகவும் வேண்டிக்கொண்டு, “நீர் இதை அந்த அதிபதிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன். ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். எனவே இயேசு அவர்களுடன் சென்றார். அவனுடைய வீட்டிற்குச் சமீபமாய் அவர் வந்துகொண்டிருக்கையில் அந்த நூற்றுக்குத் தலைவன் தனது நண்பர்களை அவரிடத்தில் அனுப்பிச் சொல்லும்படி சொன்னதாவது: “ஆண்டவரே, சிரமம் வேண்டாம், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியற்றவன். ஆகையால் உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான். நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது, அந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை” என்றார். அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள்.

லூக்கா 7:1-10 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்