லூக்கா 6:1-11

லூக்கா 6:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு ஓய்வுநாளிலே இயேசு தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், அவருடைய சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் நிமிட்டி அவற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள். பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் என்ன செய்தான் என்பதைப்பற்றி, நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தான்; மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார். மேலும் இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார். மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான். பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, சுருங்கிய கையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்” என்றார். இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது. ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கடுங்கோபமடைந்து, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

லூக்கா 6:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள். பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி, தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார். மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார். வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான். அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது. அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.

லூக்கா 6:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

ஓய்வு நாளாகிய ஒரு தினத்தில் இயேசு தானியங்கள் விளைந்திருந்த நிலத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் தானியத்தைக் கொய்து, தங்கள் கைகளினால் நசுக்கி அதைச் சாப்பிட்டனர். சில பரிசேயர்கள், “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? ஓய்வு நாளன்று இவ்வாறு செய்வது மோசேயின் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினர். இயேசு, “தாவீதும் அவனது மக்களும் பசியுடன் இருந்தபோது செய்ததைக்குறித்து நீங்கள் படித்திருக்கிறீர்கள். தாவீது தேவாலயத்திற்குச் சென்றான். தாவீது, தேவனுக்குப் படைக்கப்பட்ட தேவனின் அப்பத்தை எடுத்து, அதைச் சாப்பிட்டான். தன்னோடு இருந்தவர்களுக்கும் சில அப்பத்தைக் கொடுத்தான். இது மோசேயின் சட்டத்திற்கு மாறானது. ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்க முடியும் என்று அச்சட்டம் கூறுகின்றது” என்று பதில் சொன்னார். பின்பு இயேசு பரிசேயரை நோக்கி, “ஓய்வு நாளுக்கும் மனித குமாரன் ஆண்டவராக இருக்கிறார்” என்றார். மற்றொரு ஓய்வு நாள் வந்தபோது இயேசு ஜெப ஆலயத்திற்குச் சென்றார். இயேசு ஜனங்களுக்குப் போதித்தார். வலதுகை முடமான ஒருவன் அங்கிருந்தான். ஓய்வு நாளில் இயேசு அம்மனிதனைக் குணமாக்குவாரா என்பதைப் பார்ப்பதற்கு வேதபாரகர்களும், பரிசேயர்களும் காத்துக்கொண்டிருந்தனர். குற்றம் சுமத்தும்படியாக இயேசு ஏதேனும் தவறைச் செய்வாரா என அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் முடமான கை கொண்ட அம்மனிதனை நோக்கி, “எழுந்து இம்மக்களுக்கு முன்பாக நில்” என்றார். அம்மனிதன் எழுந்து அங்கே நின்றான். பின் இயேசு அவர்களை நோக்கி, “ஓய்வு நாளில் நல்லதைச் செய்வதா, கெட்டதைச் செய்வதா, எது நல்லதென்று உங்களைக் கேட்கிறேன். ஓர் உயிரைப் பாதுகாப்பதா அல்லது அழிப்பதா எது சரியானது?” என்று கேட்டார். இயேசு சுற்றிலும் எல்லாரையும் நோக்கினார். இயேசு அந்த மனிதனை நோக்கி, “உன் கையை நான் பார்க்கட்டும்” என்றார். அம்மனிதன் கையை நீட்டினான் அந்தக் கை குணமானது. பரிசேயர்களும், வேதபாரகர்களும் மிகவும் கோபமடைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “நாம் இயேசுவுக்கு என்ன செய்யக்கூடும்?” என்று கூறிக்கொண்டனர்.

லூக்கா 6:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள். பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் மாத்திரமேதவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி, தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார். மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.