லூக் 6:1-11

லூக் 6:1-11 IRVTAM

பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள். பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி, தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார். மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார். வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான். அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது. அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.