லூக்கா 6:1-11

லூக்கா 6:1-11 TCV

ஒரு ஓய்வுநாளிலே இயேசு தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், அவருடைய சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் நிமிட்டி அவற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள். பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் என்ன செய்தான் என்பதைப்பற்றி, நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தான்; மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார். மேலும் இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார். மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான். பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, சுருங்கிய கையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்” என்றார். இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது. ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கடுங்கோபமடைந்து, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.