லூக்கா 15:1-10

லூக்கா 15:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களில் ஒருவனிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமல் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும், அதைத் தேடிப்போவான் அல்லவா? அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் தனது தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டுக்கு வருவான். பின்பு அவன் தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமல் போன எனது ஆட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே அதிக மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ஒரு பெண்ணிடம், பத்து வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமல் போனால், அவள் அதைக்கண்டுபிடிக்கும் வரைக்கும், ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ? அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் கூடிவரும்படி கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; காணாமல் போன எனது நாணயத்தை நான் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வாள் அல்லவா? அவ்விதமாகவே மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் பெருமகிழ்ச்சி உண்டாகும்” என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

லூக்கா 15:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா? அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 15:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர். அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும். “ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக் காசுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்றை அவள் தொலைத்து விடுகிறாள். அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வாள் அல்லவா? அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள். தொலைந்து போன அந்தக் காசைக் கண்டெடுக்கும்போது அவள் தனது நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒன்றாக அழைத்து அவர்களை நோக்கி, ‘நான் தொலைத்த காசைக் கண்டெடுத்ததால் நீங்கள் என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்’ என்பாள். அதைப்போலவே ஒரு பாவி மனந்திருந்தி தன் வாழ்வை மாற்றினால் தேவ தூதருக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.

லூக்கா 15:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்